Published : 11,Mar 2018 04:38 AM

இசை இடைஞ்சல்: நடுவர்கள் போட்டியை நிறுத்தியது நியாயமாரே!

Port-Elizabeth-brass-band-silenced-during-play

கிரிக்கெட் களத்தில் வீரர்களின் ஆக்ரோஷத்துக்கு இணையானது ரசிகர்களின் கொண்டாட்டமும்! போட்டியை தங்கள் விருப்பப்படி பாடல் பாடியோ, கத்தியோ ஆவேசமாக ரசிப்பது வழக்கம். இது ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடும். ஈடன் கார்டன் என்றால் பாட்டிலை எறிவது கூட வழக்கமானதுதான். இதை ஒரு வகை, எரிச்சல் கொண்டாட்டம் என்று சொல்லலாம். ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் போட்டி நடக்கும்போது ’டிரம்ஸ்’ சிவமணி ஆர்ப்பாட்டமாக இசைத்தாரே ஞாபகமிருக்கிறதா? இதுதான் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி. 

பிற நாடுகளிலும் கிரிக்கெட்டை இசையால் கொண்டாடும் ரசிகர்கள் அதிகம். தாங்கள் விரும்பிய பாடலையோ, அல்லது மியூசிக் பேண்ட்டையோ அழைத்து வந்து அமர்க்களப்படுத்துவார்கள். இதை எரிச்சல் என்றோ, வீரர்களுக்கு இடையூறாக இருக்கிறது என்றோ, எந்த நாட்டு கிரிக்கெட் வீரர்களும் அதிகம் புகார் சொன்னதில்லை.

கடந்த 2000-ல் நியூசிலாந்து வீரர்கள் சிலர் தென்னாப்பிரிக்காவில் விளையாடியபோது இசை காரணமாக பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை என்று புகார் தெரிவித்தனர். இதையடுத்து போட்டி நடக்கும்போது இசை நிறுத்தப்பட்டு பிரேக்கில் மட்டும் இசைக்க அனுமதிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின் போதும் பிரேக்கில் மட்டுமே இசைக் கருவிகளை இசைக்க அனுமதிக்கப்பட்டது. 

வெஸ்ட் இண்டீஸில் 2007-ல் நடந்த உலகக் கோப்பை போட்டியின் போது, ஸ்டேடியத்துக்குள் இசைக்கருவிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. பிறகு ஆங்காங்கே கண்டும் காணாமலும் இசையை தொடர்ந்து கொண்டிருந்தனர். இப்போது மீண்டும் அதே போன்ற பிரச்னை, தென்னாப்பிரிக்காவில்! 

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 243 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று தொடர்ந்தது. ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றுள்ளது. டிவில்லியர்ஸ் பொறுப்பாக ஆடி, 74 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். 

இந்தப் போட்டியின் போது, பேண்ட் இசைக் கலைஞர்கள் பாடல் பாடிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு போட்டியின் போதும் தென்னாப்பிரிக்க இசைக் கலைஞர்கள் ஸ்டேடியத்தில் இசையை எழுப்புவது வழக்கம். நேற்றைய போட்டியிலும் அப்படியே. பேண்ட் வாழ்த்தியங்கள் முழங்கின. ரசிகர்கள் மகிழ்ச்சியாக நின்றபடியே பாடி ஆடினர். 

இந்த இசை, இரைச்சலாக இருப்பதாகவும் இதனால் களத்தில் இருக்கும் வீரர்களுக்குத் தொந்தரவாக இருப்பதாகவும் ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர், கள நடுவர்கள் தர்மசேனா மற்றும் எஸ்.ரவியிடம் புகார் தெரிவித்தனர். அவர்கள் மூன்றாவது நடுவரிடம் இதைத் தெரிவித்தனர். இந்த ’இசை இரைச்சல்’ வீரர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக முடிவு செய்தனர். இதையடுத்து இரண்டு முறை ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இது சரிதானா? என்று தென்னாப்பிரிக்கா வீரர் ஹாசிம் அம்லாவிடம் கேட்டால், ‘எனக்கு இசை பிடிக்கும். ரசித்துக்கொண்டே ஆடுகிறேன். இது எங்களுக்கு எந்த இடையூறையும் செய்யவில்லை’ என்கிறார். ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷிடம் கேட்டால், ‘நான் இசையை நேசிப்பவன். எனக்கு இசையால் எந்த பிரச்னையும் இல்லை’ என்று நழுவுகிறார்.
ஆனால், ’இசை இடையூறு’ என்று நடுவர்கள் போட்டியை நிறுத்தியதற்கு கடும் எதிர்ப்புக் கிளப்பி இருக்கிறது.

நேற்று இசை நிகழ்ச்சியை நடத்திய இசைக்குழுவின் பொருளாளர் கோல் இங்ரம் கூறும்போது, ‘ரசிகர்களை உற்சாகப்படுத்த வே இசைக்கிறோம். ஆனால் நடுவர்கள், வீரர்கள் கூறுவதைக் கேட்க முடியவில்லை என்கிறார்கள். இதனால் நிறுத்திவிட்டோம்’ என்றார். 

இனி, ரசிகர்கள் கைதட்டுவதற்கும் விசில் அடிப்பதற்கும் கூட தடை விதிப்பார்கள் போலிருக்கிறது!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்