பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இன்னொரு அப்ரிடி!

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இன்னொரு அப்ரிடி!
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இன்னொரு அப்ரிடி!

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்குப் பஞ்சமில்லை. உலக அளவில், மிரட்டும் பந்துவீச்சாளர்களை கொண்ட அணி என்று அதைச் சொல்லலாம். சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா தோற்கக் காரணமாக அமைந்தது அவர்களின் ஆக்ரோஷப் பந்துவீச்சுதான். முகமது ஆமிர், சதாப் கான், ஹசன் அலி என சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள், இப்போது. இவர்களின் அடுத்த வாரிசாக வந்திருக்கிறார் ஷஹீன் அப்ரிடி. ஷகீனுக்கு வயது 17-தான். அதற்குள் பாகிஸ்தானின் பரபரப்பு வீரராக மாறியிருக்கிறார். 

ஜூனியர் உலகக் கோப்பையில் கவனிக்கப்பட்ட ஷகீன், இப்போது பாகிஸ்தான் லீக் போட்டியில் விளையாடி வருகிறார். துபாயில் நடக்கும் இந்தத் தொடரில் அவர் லாகூர் அணிக்காக விளையாடும் அவர், நேற்று நடந்தப் போட்டியில் முல்தான் சுல்தான் அணிக்காக பந்துவீசினார்.  3.4 ஓவர்களில் வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதனால் அந்த அணி, 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து லாகூர் அணி வெற்றிப்பெற்றது. ஆட்டநாயகன் விருது ஷஹீன் அப்ரிடிக்கு வழங்கப்பட்டது. 

ஏற்கனவே பாகிஸ்தானில் ஷாகித் அப்ரிடி அதிரடி காட்டி வந்தார். 37 பந்தில் சதம் அடித்து சாதனை படைத்த ஷாகித் அப்ரிடி, பந்துவீச்சிலும் அசத்திய ஆல்ரவுண்டர். சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் இப்போதும் அதே பிட்னஸுடன் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். இப்போது அவரைப் போலவே இந்த அப்ரிடியும் வந்திருப்பதை பாகிஸ்தானில் கொண்டாடுகிறார்கள்.

’இந்த ஷஹீன் அப்ரிடி ஆறடி, ஆறு அங்குல உயரம் கொண்டவர். யார்க்கர், இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என எப்படியும் பந்துவீச முடியும் இவரால். ஏற்கனவே, குயெட் ஏ ஆசாம் டிராபி போட்டியில் வெறும் 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். முதல் தர போட்டியில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். வாசிம் அக்ரம்தான் இவரது இன்ஸ்பிரேஷன்’ என்கிறார்கள்.

‘ஒரு புதிய நட்சத்திரம் பிறந்துவிட்டது’ என்று இவரை வர்ணிக்கிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா. அது உண்மைதான் என்பது போலவே இருக்கிறது அவரது பந்துவீச்சு ஸ்டைலும் விக்கெட் எடுக்கும் வேகமும்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com