[X] Close

கிரிக்கெட்டில் அதை அறியாதவரா விஜய் சங்கர்?

vijay-shankar-talks-about-his-first-international-wicket

சர்வதேச போட்டிகளில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார் தமிழக கிரிக்கெட் வீரரான ஆல்ரவுண்டர் விஜய் சங்கர். 

இலங்கைக்கு எதிரான முதல் போட்டியிலேயே அவருக்கு விக்கெட் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், கோட்டை விட்ட கேட்ச்-களால் அந்த வாய்ப்பு பறிபோனது. இந்த முதல் போட்டியில் மற்ற பந்துவீச்சாளர்கள், ரன்களை வாரி வழங்க, இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசிய விஜய் சங்கர், 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 

இந்நிலையில் பங்களாதேஷூடன் நேற்று இரண்டாவது போட்டி. இதில் 4 ஓவர்கள் முழுமையாக வீசிய விஜய் சங்கர், இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த விக்கெட்டுகளின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தன் பெயரையும் பதிவு செய்துகொண்டார் விஜய் சங்கர். இவரது முதல் சர்வதேச விக்கெட்டுக்கு பலியானது முஷிபுர் ரஹிம். அதுவும் டிஆர்எஸ் முறையில்தான் அந்த விக்கெட் கிடைத்தது அவருக்கு. இன்னும் மூன்று விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியிருக்க வேண்டும். ரெய்னா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விட்ட கேட்ச்களால் அந்த வாய்ப்பு பறிபோனது. 


Advertisement

’கேட்ச் டிராப் ஆனது பாதித்ததா? என்று விஜய் சங்கரிடம் கேட்டால், ‘இல்லை. விளையாட்டில் இது சகஜம்தான். மின் ஒளியில் பாய்ந்து வரும் பந்துகளை பிடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பது தெரியும். கேட்ச் டிராப் ஆனதும் அடுத்த பந்தை சிறப்பாக வீச வேண்டும் என்று சென்றுவிட்டேன். ஆனால், எனக்கு கிடைத்த முதல் விக்கெட்டை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்’ என்கிறார். 

விஜய் சங்கரின் முன் கதை:
சென்னை மடிப்பாக்கத்தில் வசிக்கும் விஜய் சங்கருக்கு சிறுவயதிலேயே கிரிக்கெட் ஆசை. மகனின் ஆசையை நிறைவேற்ற அவரது அப்பா, வீட்டின் மொட்டை மாடியிலேயே நெட் கட்டிக் கொடுத்துவிட்டார் பிராக்டிஸ் பண்ண. தினமும் இதில் கடும் பயிற்சி. பிறகு சின்ன சின்ன போட்டிகள். 2012-13-ல் ரஞ்சியில் ஆட வாய்ப்பு. மூன்று போட்டிகளில் விளையாடிய விஜய், அந்த மூன்றிலும் சதம் அடித்து எல்லோரையும் வியக்க வைத்தார்.


Advertisement

2014-2015 ரஞ்சி போட்டியில் 7 போட்டிகளில் 577 ரன்கள் குவித்த விஜய், கூடவே 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதையடுத்து ’இந்திய ஏ’ அணியில் ஆட வாய்ப்பு வந்தது. ஆஸ்திரேலிய ’ஏ’ அணிக்கு எதிராக இவர் மிடில் ஆர்டரில் அரை சதம் அடித்து வியப்பளிக்க, தென்னாப்பிரிக்க ஏ அணியுடன் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. இதன் இறுதி போட்டியில் 79 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் விஜய் சங்கர். 

இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான், கடந்த ஆண்டு நாக்பூரில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆட அவருக்கு அழைப்பு வந்தது. திருமணத்துக்காக புவனேஷ்வர்குமார் அந்தப் போட்டியில் விடுமுறை எடுத்துக்கொண்டதால் இந்த அழைப்பு. இருந்தாலும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த வாய்ப்பு இப்போது முத்தரப்பு டி20 தொடரில் கிடைத்திருக்கிறது அவருக்கு.

ஒப்பிட வேண்டாம்

இலங்கை முத்தரப்புத் தொடருக்கு விஜய் சங்கர் பெயர் அறிவிக்கப்பட்டதுமே, பாண்ட்யாவுக்கு மாற்றாக இவர் களமிறக்கப்படுகிறார் என்றனர். இதுபற்றிய பேசிய விஜய் சங்கர், ’ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பானவர்கள். அதனால் யாரையும் ஒப்பிட்டுப் பேச வேண்டாம்’ என்றார். அது உண்மைதான். அவருக்கும் இவருக்கும் களத்தில் ஆயிரம் வேற்றுமைகள் இருக்கிறது.

நேற்றையை போட்டியில் வென்றதும் 'கடந்த சில வருடங்களாக பந்துவீச்சில் கடும் பயிற்சி எடுத்து வருகிறேன். இந்திய அணிக்காக விளையாடுவது எல்லோருக்கும் கனவு. அது நனவாகி இருக்கிறது. இதே போன்று இன்னும் சிறப்பாக விளையாடவேண்டும் என நினைக்கிறேன். டீமில் அனைவரும் ஆதரவாக இருக்கிறார்கள். ஒரு கிரிக்கெட்டராக தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். இந்தப் போட்டியில் சில விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு வீரருக்கும் அழுத்தம் கண்டிப்பாக இருக்கும். அதை ரசிக்கப் பழகிவிட்டால் சிறப்பாக விளையாடலாம்’ என்ற விஜய் சங்கர், பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலுமே கலக்குபவர்.

விஜய்யின் மித வேகப்பந்துவீச்சில் பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாமல் தடுமாறுவது நிச்சயம். அதே நேரம் சரியான லென்த்தில் பந்துவீசி விக்கெட் எடுப்பதில் அவர் ஜித்து ஜில்லாடி என்கிற கிரிக்கெட் வல்லுனர்கள், அடுத்தடுத்தப் போட்டிகளில் விஜய் சங்கரின் அமைதியான ஆர்ப்பாட்டத்தைப் பார்க்கலாம் என்கிறார்கள். ஆனால், பேட்டிங்கில் தன்னை நிரூபிக்க அவருக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இது ஒரு புறமிருக்க, அடுத்த தொடரில் பலத்தோடு பாண்ட்யா வந்துவிட்டால், விஜய் சங்கரின் இடம் கேள்விக்குறிதான் என்பதையும் அவர் அறியதாவரல்ல.

ஏனென்றால் கிரிக்கெட் திறமையோடு அரசியலும் ஆடும் ஆட்டம்!


 


Advertisement

Advertisement
[X] Close