[X] Close

டீசர் லீக்..ட்ரெய்லர் லீக்.. யார் இந்தக் கறுப்பு ஆடுகள்?

tamil-movie-piracy-culture-puthiya-thalaimurai-special-story

‘காலா’ டீசர் காலையில் வெளியாகும் என்கிறார் தனுஷ். அதற்கு முன் அர்த்தராத்திரியில் அது வெளியாகிவிடுகிறது. ‘2.0’ டீசருக்காக ஒரு உழைப்பாளிக்கூட்டம் ராத்திரி பகலாக கூட்டுப் புழுப்போல கூடி உழைக்கிறார்கள். ஆனால் அது சர்வசாதாரணமாக வெளியாகிறது. ஹாலிவுட் தரத்தில் அதன் வடிவம் இருக்கும் என கணக்குப் போட்டால் அந்த டீசர் அவ்வளவு அழகாக இல்லை. மலையளவு கிடைக்க வேண்டிய பப்ளிசிட்டி ‘பப்ளிக்குட்டி’யாகிவிடுகிறது. ஜெட் வேகத்தில் புறப்பட வேண்டிய ராக்கெட் புஸ்ஸ்ஸ்.. என புஸ்வானம் போல புதைந்துப் போகிறது. 


Advertisement

இது ஏதோ இப்போதுதான் இல்லை. இண்டர்நெட் யுகம் தலைத்தூக்கியதில் இருந்தே தமிழ் சினிமாவின் தலையெழுத்தை தீர்மானிப்பவர்கள் யாரும் சினிமா வட்டத்தின் அதிகாரப்பூர்வமான ஆட்கள் இல்லை. அத்தனையும் கறுப்பு ஆடுகள். பைரசி பிரச்னையையே ஒழுங்காக ஒழுங்குப்படுத்த முடியாமல் திண்டாடும் திரை உலகம் திக்குமுக்காடிப் போய் உட்கார்திருக்கிறது இந்தக் கறுப்பாடுகள் முன்னால்.


Advertisement

முழு வீச்சாக இந்தப் படையெடுப்பு நடைபெறுகிறது. முதலில் அனிருத்தின் ‘கொலவெறி’ பாடல் ஆன் லைனில் லீக் ஆனது.இதான் பிள்ளையார் சுழி. ஆனால் அந்த கேசில் விஷயம் வில்லங்கம் ஆகவில்லை. மாறாக அனிருத்தை விஐபி ஆக்கியது. ஊர் முழுக்க ‘கொலவெறி’ பிடிச்சுப்போய் அவரைக் கொண்டாடினார்கள். அப்புறம் ‘க்ராக்’ வெர்ஷனை மாற்றி முழுமையான வடிவத்தை வலைதளத்தில் ஏற்றினார்கள். “யுடியூப்பில் ஏற்றிவிட்டு நைட் படுக்கப் போனோம். விடிவதற்குள் பல லட்சம் போர் பார்த்தார்கள் என கணக்கு வந்தது. மறுநாளில் இருந்து நான் தூங்கவே இல்லை. யுடியூப் முன்னாடியே உட்கார்ந்து கவுண்ட் பண்ணிக்கிட்டிருந்தேன்” பாட்டு லீக் ஆனதை சந்தோஷமாக சொன்னார் அனிருத். இந்த விஷயத்தில் இவர் அளவுக்கு இண்டரஸ்ட்ரியில் வேறு யாரும் சந்தோஷமாக இல்லை. அதுதான் உண்மை. 

அடுத்து ‘பீப்’ சாங். சிம்புவின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட சமாச்சாரம். அவர் வீட்டில் வைத்திருந்ததை வெளியில் வந்து கொட்டியவர் யார் என இதுவரை தெரியவில்லை. அவர் ‘நான் பாத்ரூமில் பாடியதை யாரோ வெளியே லீக் செய்துவிட்டார்கள்’ என்றார். மாதர் சங்கம் உட்பட பல சங்கங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத ஒரு வீடியோவிற்காக அவரை ஆட்டிப்படைத்தார்கள் என்பதை எப்படி புரிந்துக் கொள்வதோ தெரியவில்லை. 

இப்படிதான் பல படங்கள். ‘பைரவா’ படத்தின் ஆஸ்திரேலிய படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட பாடல் காட்சி ஒன்று வெளியானது. ‘கத்தி’யில் ‘செல்ஃபிபுள்ள’ பாடல் லீக் ஆனது. ஆனால் அது அதிகாரப்பூர்வ வடிவம் இல்லை. மீண்டும் அழகிய வடிவம் வரும் என்றார்கள். ‘தலைவா’வில் ‘வாங்கண்ணா வணக்கம்ங்கண்ணா’ பாடல் அப்படிதான் பறிப்போனது. அதற்காக கமிஷ்னர் வாசற்படி வரை ஏறி நியாயம் கேட்டார் இயக்குநர் ஏஎல் விஜய். ’ஸ்பைடர்’ படத்தின் ட்ரெய்லருக்கும் இது நடந்தது.


Advertisement

இந்தப் படங்கள் யாவும் பெரிய நடிகர்களின் படங்கள் என்பது முக்கியம். இந்திய சினிமாவே எதிர்பார்ப்பில் மூழ்கி இருந்த‘பாகுபலி2’ தமிழ்ப் பகுதி ட்ரெய்லர் லீக்கானது மாபெரும் அநியாயம். படத்தை  முழுக்க பூட்டிப்போட்டு ஷூட் பண்ண ராஜமவுலி கடைசியில் சாவியை ஊர் முழுக்க கொடுத்துவிட்டார். அந்தளவுக்கு அஜாக்கிரதை. அதற்கு அவர் சொன்ன காரணம் புதியது. ‘ஃபேஸ்புக்கில் உள்ள ஒரு பக்(Bug) ஆல் வந்தது பிரச்னை. பைரசி வேறு லீக் வேறு’ என விளக்கம் அளித்தார். மேலும் உண்மை தெரியாமல் யாரையும் குறை சொல்ல முடியாது என மனிதாபிமானமாக நடந்து கொண்டார்.

இந்த மனிதாபிமானம் திருடி வலைதளத்தில் ஏற்றுபவர்களுக்கு இருப்பதில்லை. இந்திய சினிமாவில் மட்டும்தான் இவ்வளவு திருட்டுத்தனங்கள். ஐரோப்பிய சினிமாக்களில் இந்தளவுக்கு இல்லை என்கிறார் பிரசாத் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் சரவணன். “ஹாலிவுட் இயக்குநர் ஒருவரின் ஸ்கிரின் ப்ளே ஒன்று படமாவதற்கு முன்பே திருட்டுப்போய்விட்டது. அதனால் அந்தப் படத்தையே அவர் எடுக்க முடியாமல் போனது. அந்தப் பிரச்னை ஹாலிவுட்டில் பெரிய அளவுக்குப் பேசப்பட்டது. ஆனால் மற்றபடி இதைபோல் பெரிய லீக் எல்லாம் அங்கே இல்லை. அவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் மிகச் சரியாக செய்கிறார்கள். எல்லாவற்றிற்கும் அவங்கே சட்டப்படியான பாதுக்காப்பு இருக்கிறது. இங்கே அப்படி ஒரு சட்டப்பாதுக்காப்பே கிடையாது. மேலும் இந்த லீக் விஷயங்கள் எல்லாம் பிறநாடுகளில் இருந்து நடத்தப்படுகின்றன. இந்தியாவில் நடப்பது குறைவு. நம்ம சினிமாவில் ரூல்ஸே இல்லை. எந்தப் படம் எவ்வளவு சம்பாதித்தது? எவ்வளவு நஷ்டமானது என்பதில் கூட வெளிப்படை தன்மை இல்லை. அங்கே அப்படி இல்லை. நார்த் அமெரிக்கா எவ்வளவு கலெக்‌ஷன். சவுத் அமெரிக்கா எவ்வளவு கலெக்‌ஷன் என தெளிவாக வரையறை செய்து பதிவு செய்கிறார்கள். இங்கே வெறும் வியாபாரம் மட்டும்தான். ஒரு ட்ரெய்லர் வெளியானல் அதில் எவ்வளவு வருமானம்? டீசர் வந்தால் எவ்வளவு வருமானம் என பார்க்கிறார்கள். பாதுக்காப்பு விஷயங்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் அளிப்பதில்லை” என்கிறார் அவர்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் தரும் தகவல் வேறுவிதமாக உள்ளது.“இப்போ வெளியான ‘2.0’ டீசர் தமிழ்நாட்டில் இருந்து வெளியாகவில்லை. தயாரிப்பாளர் சுபாஷ் கொடுத்த பர்த் டே பார்ட்டியில் இருந்து லீக் ஆகியிருக்கிறது. அங்கே அவரது  நண்பர்களுக்கு அவர் போட்டுக்காட்டி இருக்கிறார். அதில் யாரோ சுட்டு வெளியிட்டுவிட்டார். ஆகவேதான் அதன் வடிவம் சரியாக இல்லை. ப்ரிண்ட் எப்படி மோசமாக உள்ளது என்பதை பார்த்தால் அது புரியும். இதைபோல பொது விழாவில் போட்டுக் காட்டுவது தவறில்லை. ஆனால் அது கட்டுக்கோப்பான பாதுக்காப்புடன் போட்டுக்காட்ட வேண்டும். ஹாலிவுட் ஸ்டுடியோவில் படம் வருவதற்கு முன்பே ஸ்டுடியோவில் போட்டுக்காட்டுவார்கள். ஆனால் அந்த ப்ரீவ் ஸ்டியோவிற்குள் மொபைல் போனை கொண்டுபோக முடியாது. அதுதான் ரூல். இங்கே அப்படியா? இல்லையே? ‘காலா’ இங்கேதான் வெளியாகி இருக்கிறது. அதை யார் கொண்டுபோய் லீக் செய்தார்கள் என்பதை கண்டுப்பிடிப்பதற்குள் அதை லட்சக்கணக்கில் பார்த்துவிடுகிறார்கள். அதனால் தயாரிப்பாளருக்கு எவ்வளவு நஷ்டம் வருகிறது தெரியுமா?” என்கிறார் அவர்.

ஒரு டீசர் சொன்ன தேதியில் வரும் போதுதான் அந்தத் துறை அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது பொருள்.வரம்பை மீறி அது வெளியாகிறது என்றால் அது போகின்றவர்கள் வருகின்றவர்கள் கைகளில் சிக்கித் தவிக்கிறது என்பது அர்த்தம். ஷங்கர் போல ஒரு பெரிய இயக்குநர் காற்றுக்கூட புகமுடியாத அளவுக்குக் கட்டுப்பாட்டுடன் படப்பிடிப்பை நடத்துகிறார். ஆனால் அது இறுதிநேரத்தில் காற்றில் கரைந்து பாழாகிறது என்றால் அந்த முடிச்சு எங்கே இருக்கிறது என்பதை சினிமா துறை கவனிக்க வேண்டும். அதவாது இன்னும் அதிக கவனத்துடன் கவனிக்க வேண்டும். பெரும்பாலும் இந்த டீசர், ட்ரெயலர் எல்லாம் பென் ட்ரைவ், ஹார்ட்டிஸ்க் போன்ற பல உபகரணங்களில் சேமிக்கப்படுகின்றன. அதைக் கடைசிநேரத்தில் கையாளுபவர் வேட்டு வைத்து விடுகிறார். ஒரு கம்பெனியைவிட்டு இன்னொரு கம்பெனிக்கு மாறும்போது இந்தக் கறுப்பு ஆடுகள் உள்ளே புகுந்துவிடுகிறார்கள். ஆனால் இதில் விநோதம் என்னவென்றால் இவர்கள் யாரும் திட்டமிட்ட கறுப்பு ஆடுகள் இல்லை. கடைசிநேரத்தில் கறுப்பாடுகளாக மாறுபவர்கள். மேலும் தொழில் ரீதியாகவும் வியாபார சண்டையாலும் இவை நடக்கின்றன.

இதை தடுக்க கோட் நம்பர் போன்ற விஷயங்களை ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றி மாற்றி பயன்படுத்துவதன் மூலம் கண்டுப்பிடித்துவிடலாம் என்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி பல சாதனங்கள் சந்தையில் உள்ளன. அதற்காக செலவு செய்ய பயப்படும் போது இந்த மொத்த சொத்தும் ஊர் சொத்தாகிவிடுகிறது. வெறுமனே ‘டோரண்ட்’ தளைங்களை மிரட்டுவதைவிட ‘பைரசி’யை தடுக்க சவால் விடுவதைவிட சட்டரீதியாக பாதுக்காப்புக் கேட்டு பெறுவதும் சரியான தொழில்நுட்பங்களை பெருஞ்செல்வம் போட்டு வாங்கி பாதுக்காப்பதுமே தமிழ் சினிமாவின் வாழ்க்கையை வளர்த்தெடுக்கும். அல்லது வாழ வைக்கும்.  
 
 


Advertisement

Advertisement
[X] Close