Published : 08,Mar 2018 12:25 PM
சிட்டம்பட்டி டோலில் முழு கட்டணத்திற்கு தடைகோரி வழக்கு: நெடுஞ்சாலைத் துறைக்கு நோட்டீஸ்

மதுரையிலிருந்து மாநில நெடுஞ்சாலைக்கு, தேசிய நெடுஞ்சாலை 45B வழியாக பயணிக்கும் வாகனங்களிடமும், சிட்டம்பட்டி டோல் மையத்தில் முழு கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
காரைக்குடி முத்துப்பட்டிணத்தைச் சேர்ந்த அருண் சுவாமிநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி செய்து வரும் நிலையில், ஒவ்வொரு வார இறுதியிலும் சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். இதற்காக 4 வழி தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் நிலையில், ஒத்தக்கடையை தாண்டிய சில கிலோ மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 45Bயில் சிட்டம்பட்டி டோல் நிலையம் அமைந்துள்ளது. 15 கி.மீ தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்த 75 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது சிட்டம்பட்டி டோல் மையத்திலிருந்து பூதக்குடி டோல் மையம் வரையிலான 92 கி.மீட்டர் பயன்பாட்டிற்கான கட்டணம். ஆனால் அதே கட்டணத்தை 15 கி.மீட்டர் பயன்பாட்டிற்கு வசூலிக்கின்றனர்.
இரு வழிக்கட்டணமாயின் 115 ரூபாயை வசூலிக்கின்றனர். பயன்பாடின்றி இதுபோல அதிக கட்டணத்தை வசூலிப்பது ஏற்கத்தக்கதல்ல. காரைக்குடிக்கு அருகிருக்கும் நகரங்களில் முக்கியமானது, முதன்மையானது மதுரை. மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், நோயாளிகள் என அனைவரும், மதுரை வருவதற்கு 15 கி.மீ சாலையை தவிர வேறு வழி இல்லாத நிலையில் இந்த சாலையை பயன்படுத்துவதற்கு அதிகமான கட்டணத்தை செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிப்படி, ஒரு கிலோ மீட்டருக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு, பயன்பாட்டு தொலைவிற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் அந்த விதிகள் கடைபிடிக்கப்படுவதில்லை.
மாநில நெடுஞ்சாலை 191 பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இருப்பினும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. கடந்த 2013 மே, 24-ல் சாலையின் முழு தொலைவையும் பயன்படுத்துவோரிடம் மட்டும் டோல் கட்டணத்தை வசூலிக்க வேண்டுமென அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே, மாநில நெடுஞ்சாலை 191க்கு(மேலூர், திருப்பத்தூர், காரைக்குடி, புதுக்கோட்டை) உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு டோல் கட்டணத்தை வசூலிக்க தடை விதிக்க வேண்டும். அதுவரை சிட்டம்பட்டி டோல் மையம் வழியாக மாநில நெடுஞ்சாலைக்கு செல்வோரிடம் முழு கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயனண், ஹேமலதா அமர்வு இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை மார்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.