[X] Close

வைரமுத்து என்றால் மன்னிப்பு... ஹெச்.ராஜாவிற்கு என்றால் வருத்தமா? என்ன நியாயம் இது? 

periyar-statue-issue--puthiya-thalaimurai-special-story

‘நான் செய்யவில்லை. எனது அட்மின் செய்த பதிவு அது’என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குறிப்பிட்டிருக்கிறார். யார் அந்த அட்மின்? அவருக்கு அந்தளவுக்கு அதிகாரம் வழங்கியது யார்?’’ என பலருக்கும் கேட்கத் தோன்றுவது இயல்புதான். 

பதிவை நீக்கிய ராஜா, அட்மினை வேலையை விட்டு நீக்குவாரா என சிலர் கேட்கலாம்? அந்தளவுக்கு நியாமான நடவடிக்கை தேவை என பலரும் கூறினால் அதை புறந்தள்ள முடியாது. கோரிக்கைக்கு கொடிப்பிடிக்கிறார்கள் திராவிட ஆர்வலர்கள், பெரியார் பற்றாளர்கள். ஒரு விதத்தில் ராஜாவுக்கு... இல்லை, இல்லை அவரது அட்மினுக்கு திராவிட அமைப்பினர் நன்றி கூறிக் கொள்ளலாம். சோர்ந்து கிடந்த பெரியார் பற்றாளர்களை மீண்டும் பற்றி எரிய வைத்ததற்காக. ஆனால் இதில் ஒரு விஷயத்தை ராஜா தெளிவுபடுத்த வேண்டும். அவர் என்ன சொல்லியிருக்கிறார்? 


Advertisement

"நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா சிலைகளும் அகற்றப்படும் என்ற முகநூல் பதிவை, என் அனுமதி இன்றி Admin பதித்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன். கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு இதயப் பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். 

அத்துடன் ’’மேலும் ஈ.வெ.ரா சிலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல. ஆகவே ஆக்கபூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இணைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது’’ என்றும் ஹெச்.ராஜா தெரிவித்திருக்கிறார். 

இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா “விமானத்தில் பயணித்த போதுதான் அந்தப் பதிவை பார்த்தேன். உடனே நீக்கிவிட்டேன். அட்மினையும் நீக்கிவிட்டேன்” என விளக்கம் அளித்திருக்கிறார். இதில் இன்னொரு விஷயத்தை அவர்  அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என் தெளிவுபடுத்தி இருக்கிறார். சரி, இவருக்கு அந்தக் கருத்து மீது உடன்பாடில்லை என்றால் அவர் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்? மன்னிப்பு அல்லவா கேட்டிருக்க வேண்டும்? அதுதானே முறை. இங்கே அவர் ‘வருத்தம்’ எனக் கூறுவது எப்படி? வைரமுத்துவை ‘வருத்தம்’ கூறியது முறையல்ல; ‘மன்னிப்புக் கேட்பதே சரி’ என இவர்தானே குறிப்பிட்டிருந்தார். வைரமுத்துவை மன்னிப்பு கேட்க சொல்லிவிட்டு இவர் வருத்தம் தெரிவிப்பது நியாயமா? 


Advertisement

முதலில் ராஜாவிடம் சில கேள்விகளை தெளிவுப்படுத்த சொல்ல வேண்டும். வைரமுத்து கூறிய கருத்தில் மாற்றுக் கருத்து இருந்த இவர் என்ன செய்தார்? காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார். ஒரு படித்த பண்டிதர் பக்கத்தில் இருந்து வந்தவர் உபயோகிக்கும் வார்த்தைகளா அது? திமுக மேடைப்பேச்சுக்கள் எவ்வளவு அறிவார்ந்த அளவுக்கு இருந்ததோ அதே அளவுக்கு ஆபாசமும் இருந்தது என்பதை மறுக்க முடியாது. மூன்றாம் நிலை பேச்சாளர்கள் என பல முகம் சுளிக்கும் பேச்சுகளை அவர்கள் பேசியிருக்கிறார்கள். அந்தக் கலாச்சாரத்தை எதிர்க்கும் இவர், மீண்டும் அதே மேடை மொழியையா தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும். அதை மாற்றி அல்லவா அழகுப்படுத்த வேண்டும். அதை நீங்கள் செய்யவில்லையே ராஜா?

இந்தப் பெரியார் சிலை விவகாரத்தில் ஓர் ஆறுதல் உண்டு. அவர் தரப்புத் தலைவர்களே அவரது கருத்தை மிக கடுமையாக கண்டித்திருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி, “சிலைகள் அகற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு” உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தொலைபேசியில் பேசியிருப்பதாக தெரிகிறது. இந்த விஷயத்தில் அவர் அமைதிக்காக்காமல் வேகமாக செயல்பட்டு கருத்து கூறியிருப்பது மகிழ்ச்சியான காரியம். 

“பெரியார் போன்ற பெரிய தலைவர்களை அவமதிப்பு செய்வதையும் சிலைகளை இடிப்போம் என்ற மரியாதை குறைவான கருத்துக்களையும் பாஜக ஆதரிக்காது” என முரளிதர் ராவ் சொன்னதும் நல்ல விஷயம்தான். 


  
அதேபோல “சிலைகளை தேசப்படுத்தும் பாஜகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அமித்ஷா தெரிவித்திருக்கிறார். “வளர்ச்சி பாதைக்குதான் போவோம். கிளர்ச்சி பாதைக்கு அல்ல” என தமிழிசை கூறியிருக்கிறார். மேலும் பெரியார் சிலையை சேதப்படுத்திய திருப்பத்தூர் நகர ஒன்றியச் செயலாளர் ஆர். முத்துராமன், பாஜகவின் அடைப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். 

வருத்தம் தெரிவித்தது சரி. ஆனால் இந்த அசம்பாவிதங்களை ஏற்படுத்தியதற்காக ராஜா என்ன பதில் சொல்ல போகிறார்? வழக்கமாக அமைதிப்பூங்காவாக திகழும் தமிழ்நாடு என ஆயிரம் முறை கூறும் அதிமுக அரசு என்ன செய்யப்போகிறது? “அமைதிப்பூங்காவான தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கப்பவர்கள் ‘ராஜா’ வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார். அந்த நடவடிக்கை என்ன? ‘ராஜா’ வீடு என அமைச்சர் கூறுவது யாரை? அந்த ராஜா எங்கே இருக்கிறார்?

“எல்லா தலைவர்களின் பங்களிப்பையும் மதிக்க வேண்டும். எந்தத் தலைவரையும் எந்தச் சிலைகளையும் அவமதிப்பதை பாஜக கண்டிக்கிறது.” என்கிறார் தமிழிசை. ஆனால் அவர்கள் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு கொடுக்கும் மரியாதையை, காந்திக்கு தர மறுக்கிறார்களே ஏன்? பாரதிக்கு தரும் மரியாதையை மனோன்மணியம்  பாடலுக்குத் தர மறுக்கிறார்களே ஏன்? தேசிய பாடலுக்கு வீர வணக்கம் செய்யும் இவர்கள், செந்தமிழ் பாடலுக்கு செவ்வணக்கம் செலுத்த தயங்குகிறார்களே ஏன்? சமஸ்கிருதம்தான் உயர்மொழி என கூறும் இவர்கள் தமிழ் செம்மொழி ஆய்வு மையத்திற்கு நிதி ஒதுக்குவதில் ஆர்வம் காட்ட மறுக்கிறார்களே ஏன்?  கிருஷ்ண ஜெயந்தியை மதிக்கும் இவர்கள், திப்பு ஜெயந்தியை எதிர்க்கிறார்களே ஏன்? வேறுப்பாட்டை களைந்து சமத்துவம் நிலவ செய்ய வேண்டியக் காலத்தில் பாகுப்பாட்டை பலப்படுத்த நினைக்கிறார்களே ஏன்? 

இறுதியாக‘யாரையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்கிறார் ராஜா. இதயப்பூர்வமாக என்றால் வருத்தமா வரும். மன்னிப்பு அல்லவா வரும். மன்னிப்பை மறுத்து வருத்தத்திற்கு திரும்பி இருக்கிறார் ராஜா. வருத்தம் வார்த்தையில் வருவது. மன்னிப்பு மனப்பூர்வமாக வருவது. வரலாறு திரும்புகிறது என சொல்வது இதை தானோ?


Advertisement

Advertisement
[X] Close