Published : 06,Mar 2018 11:51 AM
தமிழுக்கு வந்த அர்ஜூன் ரெட்டி விஜய் தேவரகொண்டா

‘அர்ஜுன் ரெட்டி’மூலம் அதிகம் அறியப்பட்ட தெலுங்கு நாயகன் விஜய் தேவரகொண்டா நடிக்கும் முதல் தமிழ்ப் படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.
கடந்த ஆண்டில் தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றப் படம் அர்ஜுன் ரெட்டி. இதற்கு முன் இவர் நடித்த "பெல்லி சூப்புலு" படமும் மாபெரும் வெற்றிப் பெற்றது. ஆனால் அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழில் அறிமுகமாகும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.
இதில் விஜய் தேவரகொண்டா, மெஹ்ரீன் பிர்ஸாதா, நாசர், சத்யராஜ், எம் எஸ் பாஸ்கர் என பலர் நடிக்கிறார்கள். இதில் நாயகி மெஹ்ரீன் பிர்ஸாதா தமிழில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற படத்தில் அறிமுகமானவர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இவர் விக்ரம்பிரபு நடித்த ‘அரிமா நம்பி’ விக்ரம் நடித்த‘இருமுகன்’ ஆகிய படங்களை இயக்கியவர். இந்தப் படத்திற்கு சாந்தா ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் அவர்களின் வாரிசு. தமிழில் இவர் அறிமுகமாகும் முதல் படம் இதுதான். மேலும் இதற்கு ‘விக்ரம் வேதா’சாம் சி எஸ் இசையமைக்கிறார்.
படத்தில் பணியாற்றும் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.