Published : 07,Mar 2017 06:03 AM

மீனவர் உடலை வாங்க குடும்பத்தினர் மறுப்பு

Fishermen-family-refused-to-take-the-body

இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவர் பிரிட்சோவின் உடலை வாங்க மறுத்து, அவரது குடும்பத்தினர், உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமேஸ்வரம் அருகேயுள்ள தங்கச்சி மடம், மாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த பிரிட்சோ, சக மீனவர்களுடன் கடலுக்குச் சென்றார். தனுஷ்கோடி, ஆதம்பாலம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு 4 படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்து மீனவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதில் 22 வயதான பிரிட்சோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனையின்போது பிரிட்சோவின் உடலில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்டது. இந்நிலையில், மீனவர் பிரிட்சோவின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பிரிட்சோ, பல ஆண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மற்றொரு மீன‌வரான சரோனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்