[X] Close

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஒரு கிராமமே திரண்டு போராட்டம்

A-Village-Protest-Against-Sterlite

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி தூத்துக்குடியில் ஒரு கிராமமே அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறது.


Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது குமரெட்டியார்புரம் கிராமம். இந்தக் கிராமத்தை சேர்ந்த மக்கள் மரத்தடி நிழலில் அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு கிராமமே போராட்டத்தில் ஈடுபடக் காரணம் என்ன என விசாரித்தபோதுதான் அது ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிரான போராட்டம் எனத் தெரியவந்தது.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்தக் கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.


Advertisement

இந்நிலையில் வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை மேற்கொள்ள உள்ளது. இதற்கான அனுமதி கிடைக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலை குமரெட்டியார்புரம் கிராமம் அருகில் அமையவுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் உயிர்வாழ தகுதியற்ற நிலை ஏற்படும் என்பதை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்ட கிராம மக்கள் அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர் பூங்கா முன்பாகக் கூடி விடிய விடிய போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி பிற்பகல் கிராமத்தினர் உட்பட 231 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து விடுவிக்கப்பட்ட குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தங்களது கிராமத்தில் மரத்தடி நிழலில் போராட்டத்தை அமைதியான முறையில் மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

இது குறித்து குமரெட்டியார்புரம் கிராமத்தை சேர்ந்த மாரியம்மாள் கூறும்போது, ஸ்டெர்லைட் ஆலையால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் நிலத்தடி நீர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை  போராட்டம் தொடரும் என்றார்.

அதேகிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி கூறுகையில், குமரெட்டியார்புரம் கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட பந்தல் அமைப்பதற்கு கூட காவல்துறை அனுமதி வழங்கவில்லை. உடனே ஆலை அகற்றப்பட வேண்டும் என்கிறார்.

 இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் குறித்த கிராமத்தினர் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி உள்ளதா என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close