காணாமல்போன ராஜராஜ சோழன் சிலை... குஜராத்திற்கு கடத்தல்..?

காணாமல்போன ராஜராஜ சோழன் சிலை... குஜராத்திற்கு கடத்தல்..?
காணாமல்போன ராஜராஜ சோழன் சிலை... குஜராத்திற்கு கடத்தல்..?

தஞ்சை பெரிய கோயிலில் இருந்து ரூபாய் 100 கோடி மதிப்பிலான சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

தஞ்சாவூரில் அமைந்துள்ள தஞ்சை பெரியகோயில் உலக பிரசித்தி பெற்ற கோயிலில் ஒன்றாகும். கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கோயில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், தற்போது இக்கோயில் இந்திய தொல்லியல் துறையின் கட்டப்பாட்டில் உள்ளது.

இக்கோவிலின் காப்பகத்தில் 13 பஞ்சலோக சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் ராஜராஜ சோழன் சிலை (75 செ.மீ உயரம்), அவரது பட்டத்து இளவரசி ராணி லோகம்மாள் தேவி சிலை (உயரம் 55 செ.மீ) ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் எம்.பி. சுவாமிநாதன் கொடுத்த புகார் அடிப்படையில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் விசாரணை நடத்தினார். இதில் பெரியகோயிலில் இருந்து ராஜராஜ சோழன், அவரது பட்டத்து ராணி லோகம்மாள் தேவி சிலை திருடப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிலைகளின் மதிப்பு 100 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தஞ்சை மேற்கு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது, இதுகுறித்து தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறும்போது,  “ கொள்ளைபோன சிலைகள் குறித்து ஆதாரங்கள் உள்ளன. அவை குஜராத்தில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் அங்குசென்று விசாரணை நடத்தி சிலையை மீட்க நடவடிக்கை எடுப்பார்கள். கோயில் காப்பகத்தில் இருந்து மேலும் பல சிலைகள் மாயமானது தெரியவந்துள்ளது. போலீசார் அதுதொடர்பாகவும் விசாரிப்பார்கள்” என்றார்.

ஐ.ஜி பொன்மாணிக்கவேல் கூறும்போது, “ சிலை திருட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். குஜராத்தில் உள்ள சிலைகளை மீட்பது குறித்து சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com