Published : 28,Feb 2018 02:13 PM
ஸ்ரீதேவி உடல் தகனம் - மூவர்ண கொடி போர்த்தி அரசு மரியாதை

துபாயில் காலமான நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று குடும்ப முறைப்படி தகனம் செய்யப்பட்டது. மகாராஷ்ட்ர அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் இந்திய தேசிய கொடி போர்த்தப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
அழகிய பெண்களுக்கான உதாரணமாக சுட்டிக்காட்டப்பட்டவர். கோடிக் கணக்கானவர்களின் இதயங்களை தனது அழகாலும், நடிப்பாலும் தனித்திறமைகளாலும் கவர்ந்தவர். தமிழில் தனது திரைப்பயணத்தை தொடங்கி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பன்மொழிகளில் பயணப்பட்டு, பாலிவுட் சென்று அங்கு தனது வெற்றிக்கொடியை நாட்டியவர். தெற்கே ஸ்ரீதேவியாக கொள்ளை கொண்டவர், வடக்கில் சாந்தினியாக ரசிகர்கள் மனங்களை சூறையாடியவர். துபாயில் உறவினர் திருமண விழாவுக்குச் சென்ற இடத்தில் காலமான ஸ்ரீதேவியின் உடல் நேற்றிரவு மும்பை கொண்டுவரப்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் அஞ்சலிக்காக ஸ்ரீதேவியின் உடல் இன்று காலை வைக்கப்பட்டது.
ஸ்ரீதேவிக்கு பிடித்த வண்ணத்தில் காஞ்சிப்பட்டு அணிவிக்கப்பட்டு அவர் விரும்பும் வகையில் பொட்டிட்டு அவரது உடல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீதேவியின் உடலுக்கு எண்ணற்ற திரைப் பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பத்மஸ்ரீ விருதுபெற்ற ஸ்ரீதேவிக்கு மகாராஷ்ட்ரா அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 21 குண்டுகள் முழங்க, அஞ்சலி செலுத்தப்பட்டு தேசியக்கொடி போர்த்தப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து ஸ்ரீதேவியின் உடல் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது.
ஏழுகிலோமீட்டர் தூரத்திற்கு ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்ட ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவும் தங்கள் கனவு நாயகியை கடைசியாக ஒருமுறை காணவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் மும்பையில் திரண்டிருந்தனர். மக்கள் வெள்ளத்தில் நீந்திச் சென்ற ஸ்ரீதேவியின் உடல், விலே பார்லே மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இறுதிச்சடங்குகள் செய்தபோது மகள்கள் ஜான்வி, குஷி மற்றும் நெருங்கிய உறவினர்கள் உடனிருந்தனர். கோடிக்கணக்கானவர்களின் நினைவில் வாழும் திரையுலக நாயகி இனி இல்லை.