[X] Close

நீட் என்னும் உத்தம வில்லன்: அதிர்ச்சி தரும் உண்மை நிலவரம்

neet-special-articles-in-puthiya-thalaimurai-website

 Dr.பி.கண்ணன், M. S. Ortho,

 முதுநிலை உதவி பேராசிரியர்
 சென்னை மருத்துவ கல்லூரி


Advertisement

சமீபத்தில் தமிழ் சொல்லாய் மாறி போன நீட், அதன் ஆதரவாளர்களால் உயர்த்தி் பிடிக்கப்படுவதற்கு சொல்லப்படும் காரணங்கள் சில

• தமிழகத்தில் இட ஒதுக்கீடை எந்த விதத்திலும் பாதிக்காது.
• மதிப்பெண் அடிப்படையில் தரத்தை உறுதி செய்யும்.
• தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை தடுக்கும்.
• ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகளை வழங்கும்.


Advertisement

மேற்கூறிய இந்த அனைத்து காரணங்களிலும் நீட் எதிர்மறையாக செயல்படும், செயல்பட்டது என்பதே உண்மை.

1.தமிழகத்தில் இட ஒதுக்கீடை எந்த விதத்திலும் பாதிக்காது.

முதலாவதாக இந்த வாதம் எவ்வளவு போலியானது என்பதை பொட்டில் அடித்தது போல் கூறியுள்ளது ஒரு வழக்கு. டாக்டர் சௌரவ் சௌதிரி எனும் நபர் தான் அதிக மதிப்பெண் பெற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பட்ட மேற்படிப்பு தேர்வில் தன்னை விட மதிப்பெண் குறைவான மாணவர்களுக்கு இடம் அளித்தது தவறு என்று உச்சநீதிமன்றத்தை நாடுகிறார். 


Advertisement

இதில் கவனிக்கத்தக்கது எய்ம்ஸ் ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனம். மேலும் மாணவர் சேர்க்கைக்கு நீட் போன்ற தேசிய அளவில் நுழைவுத்தேர்வை தானே நடத்துகிறது. இதில் தான் தகுதி மறுப்பு நடந்துள்ளது என்று சௌரவ் முறையிடுகிறார். இந்த வழக்கு எய்ம்ஸ் என்ற ஒரு கல்லூரியைத் தாண்டி தமிழக இடங்களையும் சேர்த்தே வம்புக்கு இழுத்தது. விசாரணையில் எய்ம்ஸ் முழுமையாக மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் மட்டுமே இடம் வழங்குவதில்லை என்பதும்,  எய்ம்ஸ்-ல் ஏற்கனவே எம்.பி.எஸ். படித்த மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு (AIIMS institutional quota) செய்யப்பட்டு, மீதமுள்ள இடங்களே மற்றவர்களுக்கு பொது மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்படுவது  உறுதியானது. 

சௌரவ் சௌதிரி வழக்கில் உச்சநீதிமன்றம் எய்ம்ஸ்-ல் மட்டுமல்ல; தமிழக மாநில பட்ட மேற்படிப்பு இடங்களில் அதுவரை இருந்த 25% சதவீத தேசிய இட ஒதுக்கீட்டை இரண்டு மடங்கு உயர்த்தி 50 சதவீதமாக நிர்ணயித்து அதிரடியாக உத்தரவிட்டது. அதுவரை  நம்மிடம் இருந்த சீட் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கை தேசிய தேர்விடம் இழந்தோம். இதில் வேடிக்கை என்னவென்றால், மருத்துவக்கல்வி சார்ந்த தீர்ப்புகளில் எய்ம்ஸ் தனி ரகமாகவும் தமிழகம் போன்ற மாநிலங்களை தனி இடமாகவும் பார்க்கின்ற நீதிமன்றங்கள், இன்றுவரை நீட் கட்டுப்பாட்டிற்குள் வராத எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களின் உள்இடஒதுக்கீடு விவகாரங்களை மாநில அரசின் இட ஒதுக்கீடு விவகாரங்களுடன் இணைத்து தீர்வுக் காண்பதைத்தான்.

இந்தியாவிலேயே தரத்தில் சிறந்த Premier Institution Law அடிப்படையில் உருவாக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையே தேசிய அளவில் அதிக மதிப்பெண்களுக்கு இல்லாத முக்கியத்துவம் தனது கல்லூரியில் படித்த காரணத்திற்காக மாணவர்களுக்கு உண்டு என்று நிர்ணயம் செய்து, தரம் என்பது போட்டி மதிப்பெண்ணில் மட்டும் அல்ல என்பதை உரத்துக் கூறிய இட ஒதுக்கீடு முறை இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
தீர்ப்பு இட ஒதுக்கீட்டிற்கு ஆப்பு வைத்தது  எய்ம்ஸை தாண்டி தமிழ்நாட்டின் மருத்துவ மேற்படிப்பில் மூன்றில் ஒரு பங்கு இடம் மத்திய தேர்வுக்குழுவிடம் இழந்தோம். நம் பிள்ளைகளின் எதிர்கால உரிமையை  தகுதி தரம் என்ற போர்வையில் இனிமேலும் காவு கொடுக்கும் மௌனிகளை வரும் சந்ததி மன்னிக்காது

சரி, விஷயத்திற்கு வருவோம். தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்-க்கான தேசிய ஒதுக்கீடு 15% இடங்கள், இது பல மாநிலங்களில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ் இடங்களை விட அதிகமானது. நீட் தேர்வு எழுதும் ஒருவர் ,ஒன்று தேசிய ஒதுக்கீட்டில் இடம்பெற வேண்டும் அல்லது அவர்தம் மாநில இடங்களில் ஒதுக்கீடு பெற வேண்டும்.எம்.பி.பி.எஸ் சீட்டுகள் குறைவான மாநிலங்களில் பிறந்த மாணவர் போட்டி தேர்வில் மதிப்பெண் அதிகம் பெற்றும் குறைந்த சீட்டுகள் உள்ள காரணத்தினால், மேற்கூறிய இரண்டு ஒதுக்கீட்டிலும் தோல்வியுறுகிறார். ஆனால் தமிழகத்திலோ மேற்கூறிய மாணவரை விட 50-100 மதிப்பெண்கள் குறைவாகப் பெற்ற ஒருவர் தமிழகத்தில் அதிக சீட்டுகள் உள்ள காரணத்தினால் எம்.பி.பி.எஸ் சீட் பெறுவதில் வெற்றியடைகிறார். இந்த முரணை உச்சநீதிமன்றம் ஒரு போதும் ரசித்ததில்லை. 

மேற்கூறிய வழக்கின் தீர்ப்பினால் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருந்த பட்டமேற்படிப்பு P.G இடங்கள் எவ்வாறு பறிக்கப்பட்டதோ அதே போன்று, நீட்டில் உள்ள 15 சதவீத இட ஒதுக்கீடு தனக்கு வஞ்சம் இழைத்ததாக வேறு மாநில மாணவர் கருதினால் இங்கு உள்ள எம்.பி.பி.எஸ் இடங்களும் பறிக்கப்படும் என்பதே நிதர்சனம். ஆக, நீட் தேர்வினால் நாம் பெறுவதை விட இழக்கப்போகும் இடங்களே அதிகம். இதை தடுக்க நீட் ரசிகர்கள் கூறபோகும் வழிதான் என்ன!!. 
படித்தவரும், elite  என கருதப்படுபவரும், coaching போகும் தம் பிள்ளைகள் பாதிக்க படமாட்டார்கள் என்று நம்புவரும், எளியோருக்காக குரல் எழுப்பாதிருந்தால், இந்த நீட்  P.G மற்றும் நீட் S.S அவர்கள் எதிர்காலத்தை விழுங்கியதை உணராத புத்திசாலிகள். படிப்பறிவு குறைந்த நம் முந்தைய சந்ததிகள் வரிகட்டி, வியர்வை சிந்தி உருவாக்கிய நிறுவனத்தால் கல்வியும் வாழ்க்கையும் பெற்ற நாம், அந்நிறுவனங்களின் பலனை நமது அடுத்த சந்ததிக்கு மறுக்கவிருக்கும் நீட்டை எளியவருக்காக இல்லாவிடினும் தனக்காகவாவது கேள்வி கேட்கும் பக்குவத்தை பெற மேலும் படிக்கவும்

2. இரண்டாவதாக டாக்டர் சந்தீப் என்பவர் உச்சநீதிமன்றத்தை நாடுகிறார். தான் பட்டமேற்படிப்பு முடித்து விட்டதாகவும் Mch/DM போன்ற உயர் சிறப்பு கல்வி பெற விளைவதாகவும் ஆனால் இந்தியாவில் பல மாநிலங்களில் அத்தகைய படிப்பு இல்லை எனவும், தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களிலே அவை உள்ளதாகவும், ஆனால் அம்மாநிலங்கள் தாங்கள் உருவாக்கிய கல்லூரியில் தங்கள் மாநிலத்தவற்கே இட ஒதுக்கீடு கொடுப்பதாகவும், அதன் காரணமாக தன்னைப் போன்றோருக்கு உயர் சிறப்புக் கல்வி பெற வாய்ப்பு மறுக்கப்படுவதாக வழக்கு தொடர்ந்தார். 

உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்பளித்தது. மாநில அரசுகள் தங்கள் சொந்த வருவாயில் உருவாக்கிய கல்லூரிகளில் அதுவரை இருந்த மாநில அரசு இட ஒதுக்கீடு முறையை முழுமையாக ரத்து செய்து 100%  இடமும் எவ்வித இட ஒதுக்கீடும் இன்றி நீட் SS (Super Speciality) அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஆக, நீட் PG தேர்வு 25%-மாக இருந்த All India Quotaவை 50 சதவீதமாக 2 மடங்கு ஏறச்செய்தது  என்றால், நீட் Super Speciality தேர்வு 100% இடங்களையும் எடுத்துக் கொண்டு இட ஒதுக்கீட்டையே காலி செய்தது. தமிழகத்தில் அதிக இடங்கள் உருவானதற்கு காரணம் நமது வரிப்பணம்; நமது உழைப்பு; மற்ற மாநிலங்களின் இயலாமைக்கு நமது இடங்களை தாரை வார்த்ததுதான் நீட் செய்யும் சாதனை. நீட் SS, தேர்வில் ஒரு சீட் கூட இல்லாத நிலையில், தமிழக அரசு எப்படி 69% இட ஒதுக்கீட்டை அமல் செய்ய முடியும்!!!. நீட் PG-ல் நமது இட ஒதுக்கீட்டை தொடர்ந்து இழந்து கொண்டிருக்கிறோம்  (பெரிய கிளைக்கதை).
நீட் UG தமிழகத்தின் இடங்களையும், இட ஒதுக்கீடையும் தேசிய அளவு தரம் என்ற போர்வையில் வெற்றிகரமாக ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது.

3. ஆனால் இப்படி நம்மிடம் இருந்து பறித்து  மத்திய தொகுப்பிற்கு வழங்கப்படும் எம்.பி.பி.எஸ். சீட்டுகளின் நிலை என்ன என்பதை ஒரு உதாரணத்துடன் பாப்போம்: 

வடகிழக்கு மாநிலம் மிசோராமில் அரசு மருத்துவக்கல்லூரி இடங்கள் இல்லாததால் மத்திய அரசின் வட கிழக்கு ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ். சீட்டுகள் ஒதுக்கப்படுவது வழக்கம் கடந்த 2016-ஆம் ஆண்டு மிசோராமிற்கு இத்தொகுப்பில் இருந்து 25 சீட்டுகள் வழங்கப்பட்டன. ஆனால் 2017-ல் எவ்வித காரணமும் குறிப்பிடாமல் மத்திய அரசு அதனை வெறும் 17 ஆக குறைத்தது. எம்.பிக்கள் சென்றார்கள், மத்திய அமைச்சர் நட்டாவை சந்திக்க முடியவில்லை. முதலமைச்சரின் முயற்சி பலன் அளிக்கவில்லை. ஆக, மருத்துவத் தேவைகளுக்காக ஒரு மாநிலத்தில் இருந்து பறிக்கப்படும் எம்.பி.பி.எஸ். சீட்டுகள், வெளிப்படைத் தன்மை இல்லாமல் பயன்படுத்தப்படுகிறது என்பதே நிதர்சனம். மத்திய தொகுப்பையே நம்பியுள்ள மிசோராம் 3ல் ஒரு பங்கு சீட்டினை காரணம் கூட கூறப்படாமல் இழந்தது, ‘நீட்’டினால் ஏற்படும் அபாயத்திற்கான எச்சரிக்கை மணி இது. 'சோ ' (zo) பழங்குடிகளுக்கு இட ஒதுக்கீடு என்ற மிசோராம் மாநில அரசின் உரிமையை நீட் பாதித்தது என்பதே அறிஞர் கருத்து. நம்மிடமிருந்து தேச நலன், தரம் என பல காரணங்களைக் கூறி எடுக்கப்பட்ட இடங்கள் மத்தியரசின் விருப்பத்திற்கும் பார்வைக்குமேற்ப  பிரித்து வழங்கப்படும் அழகு இதுதான். மேற்கூறியவற்றில் இருந்து தமிழகத்தில் இட ஒதுக்கீடு பெறும் மாணவர்கள் மட்டுமல்ல; தங்கள் வரிப்பணத்தால் கல்லூரிகளை உருவாக்கிய முன்னேறிய வகுப்பினர் உட்பட அனைவருக்கும் தங்கள் உரிமையான தமிழக அரசுக் கல்லூரி இடங்களை இழக்கும் நிலை உருவாகும். இட ஒதுக்கீடு காணாமல் போவது மட்டும் அல்ல. கூடவே முன்னேறிய வகுப்பினரின் வாய்ப்புகளும் சேர்ந்தே காணாமல் போகும் என்பது எதார்த்தம்.


4. தனியார் கட்டணக் கொள்கையைத் தடுக்கும்:

இருக்கிற தலைப்புகளிலேயே நகைச்சுவை மிகுந்த தலைப்பு இதுதான். பட்டப்படிப்பு வழங்கும் நிறுவனங்கள் 3 வழிகளில் இந்தியாவில் அமைக்கப்படும்.
எய்ம்ஸ், ஜிப்மர் போன்று மத்திய அரசின் தனிச் சட்டங்களாகவோ,மாநில அரசின் சட்டங்களாகவோ, அல்லது UGC சட்டம் Sec-3-ன் கீழ் அமைக்கப்படலாம்.
மேற்கூறிய சட்டங்களால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றினை நீட் போன்ற ஒரு தேர்வு கட்டுப்படுத்தும் என்ற வாதம் இந்திய ஆட்சியாளர்கள் தங்கள் அமைப்புகளின் மீது நம்பிக்கை இழந்து நீட் மீது பந்தயம் கட்டுவது போல ஆகும். 

இந்திய ஆட்சியாளர்களுக்கு தனியார் கல்விக் கட்டண கொள்ளையை தடுப்பதற்கு எள் அளவும் விருப்பம் இல்லை. இது ஏதோ மேம்போக்கான குற்றச்சாட்டு அல்ல. திருமதி. ஸ்மிருதி ராணி மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது Deemed University எனப்படும் தனியார் கல்வி நிறுவனங்களின் வரவு, செலவு மற்றும் செயல்பாட்டிற்கான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று யுஜிசிக்கு கடிதம் அனுப்புகிறார். யுஜிசி அதனை செய்வதற்கு தங்களால் இயலாது என்று கைவிரித்து விடவே சிஏஜி எனப்படும் மத்திய தணிக்கை குழுவிடம் உங்களால் Deemed University எனப்படும் கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்ய முடியுமா என கேட்கிறார். 

சிஏஜி எழுதிய பதிலில் நிச்சயம் தங்களால் முடியும் என்றும் அதற்கு அவர்கள் சிஏஜி சட்ட விதி Sec 20-ன் கீழ் வழி உள்ளது என்றும் தேவைப்பட்டால் ஆய்வு செய்ய இயலும் என்றும் பதில் அளித்து உள்ளனர். இதில் இன்னும் சிறப்பு, மத்திய அரசின் Deemed University Regulation Act 2010-ல் உட்பிரிவு 20-ன் படி சிஏஜி அனைத்து Deemed Universityயையும் ஆய்வு செய்ய முடியும் என்று வரையறுத்துள்ளது. 

சரி என்ன எதிர்பார்க்கிறீர்கள்? Deemed University-களில் எல்லாம் சிஏஜி ஆய்வு செய்யத் தொடங்கி இருக்கும் என்றுதானே, அதுதான் இல்லை. Deemed Universityகளில் எப்படி ஆய்வு செய்யலாம் என்று விளக்கமாக கேட்ட மத்திய அரசு தடாலடியாக ஒரு சட்ட திருத்தத்தை 2016-ல் Deemed University Regulation Act-ல் கொண்டு வருகிறது. உட்பிரிவு 20 மாற்றப்படுகிறது. அதுவரை சிஏஜி தணிக்கை செய்ய வழி செய்யும் அந்தப் பிரிவில் இருந்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. சுவாரசியமாக அதில் கூறப்பட்டிருப்பது கல்வி நிறுவனங்களில் சிஏஜி ஆய்வு மேற்கொள்ள ஒரு முன் தேவையாக அவை அவசியம் அரசிடம் இருந்து நிதி பெற்றிருக்க வேண்டும் என்பதே அது.

இதற்கு அரசு சொன்ன காரணம் இன்னும் வேடிக்கையானது. சிஏஜியின் தணிக்கை தனியாரின் பங்களிப்பு ஆர்வத்தை குறைத்து விடும் என்பதே அது. நாட்டின் பல ஊழல் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தியது இந்த சிஏஜி தான். அரசியல் அமைப்புச் சட்ட அதிகாரம் உள்ள சார்பற்ற ஒரு பொது தணிக்கை நிறுவனம் தனியார் கல்வி நிறுவனங்களை தணிக்கை செய்ய, ஏற்கெனவே இருந்த சட்டத்தை மாற்றி விட்டு அவைகளை குற்றச்சாட்டுகளில் இருந்தும் தணிக்கையில் இருந்தும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு, நீட் வந்து தனியார் கல்வி நிறுவனங்களை ஒழுங்கு படுத்தி விட்டது என்றும் கட்டணக் கொள்ளையை தடுத்து விட்டது என்றும் கூறுவது எத்தகைய நாணயமுடையது? சிறுபிள்ளைத்தனமானது என்பதை விவரங்களை அலசுவதன் மூலம் அனைத்து ஆர்வலர்களும் அறிவர்.அரசாங்கம் செய்யாத ஒன்றினை நீட் தேர்வில் எங்கள் பிள்ளைகள் பங்கேற்று கட்டணக்கொள்ளையை தடுக்க வேண்டு என்ற நீட் விரும்பிகளின் ஆர்வம் பாராட்டுக்குரியதே.

5. நீட்டின் மூலம் தரம் வரும்:
இந்த வாதம் வெகுஜன மயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு Percentile முறை அடிப்படையில் தேர்வு செய்கிறது. எளிமையாக கூற வேண்டும் என்றால் 100 பேர் பரீட்சை எழுதுகிறார்கள் என்றால் முதல் மதிப்பெண் வாங்கியவரிடம் இருந்து இறுதி மார்க் வாங்கியவரை வரிசையாக நிறுத்த வேண்டும். யார் 50வது ஆளாக நிற்கிறாரோ அவர் வரை தகுதி பெறுவார்கள். கடந்த ஆண்டு 96% எடுத்தவர் முதல் மதிப்பெண் என்றால், வெறும் 18% எடுத்தவர் வரை எம்.பி.பி.எஸ். படிக்க தகுதியானவர் என நீட் அறிவிக்கிறது. 

ரொம்ப சிம்பிள், பத்து லட்சம் பேர் பரீட்சை எழுதினால் சற்றேறக்குறைய 5 லட்சம் பேர் தகுதி பெறுவார்கள். வெறும் 17% ம், 16% ம், எடுத்தவர்கள் ‘நீட்’டின் தரத்தின் மூலம் எம்.பி.பி.எஸ்.பெறலாம் என்பது நகைப்புக்குரியது. மேலும் தேவைப்பட்டால் இந்தத் தரத்தையும் குறைப்பதற்கு நீட் தேர்வு நடத்துபவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது.

சரி, இந்த 14%, 17% மட்டும் அல்ல அதற்கு மேற்பட்ட மதிப்பெண் பெற்றவருடைய உண்மையான தேர்வு முடிவு என்ன தெரியுமா? இன்னும் விவகாரமானது. மாணவர்கள் Physics, Chemistry, Biology ஆகிய 3 பாடங்களில் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார்கள். நீட் தேர்வில் தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப்படும். ஆக, கணிசமான நபர்கள் ஏதாவது ஒரு பாடத்தில் (எ.கா) Physics-ல் Negative Mark பெறுவதற்கான வாய்ப்பு நிச்சயம் உண்டு. அதாவது பதில் தெரியாமல் 0 மதிப்பெண்களுக்கும் கீழே ஒரு பாடத்தில் Negative மதிப்பெண் எடுத்தவர் நீட் தேர்வில் தகுதி பெறுவர்.

இது அதீத கற்பனை அல்ல, IIT, JEE நிபுணர் குழு தனது பரிந்துரையில் இதைப்பற்றி விரிவாக விவரித்துள்ளது. இந்த வருடம் IIT பரீட்சையில் ‘+ve’ மார்க் Criteria நீக்கப்பட்டதாக கூறி இந்தக் கூத்தினை அம்பலப்படுத்தி அங்கீகரித்துள்ளது IIT main  தேர்வுக்குழு. புரிந்து கொள்ளுங்கள் IIT Main பரீட்சையை நடத்துவதும் நீட்டை நடத்தும் அதே CBSE தான். 

பாடத்திட்டத்தை பொறுத்தவரையில் “Core Syllabus” எனப்படும் பாடத்திட்ட வரையறை Medical Council of India(MCI)-வால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. MCI மருத்துவக்கல்வி பாடத்திட்டம் மற்றும் தரத்தினை நிர்ணயிக்கூடிய அமைப்பு அது பள்ளிப்படிப்பை தீர்மானிப்பது முரணின் உச்சம்.
பாடத்திட்டம் MCI Website-ல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு உதாரணத்தை பார்ப்போம் அணுக்கொள்கை தலைப்பில் Chemistry-ல் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் Physics பாடப்பகுதியில் chemistryல் நீக்கப்பட்ட அந்தப் பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில் வேடிக்கை என்ன தெரியுமா? பாடப்பகுதிகள் நீக்கப்பட்டதற்கு காரணம் அவை ஏற்கனவே இயற்பியல் பிரிவின் கீழ் உள்ளது அல்ல மருத்துவ பிரிவு  (medical stream) படிப்புக்கு அது தேவையற்றது  என்ற வினோத காரணத்தினால் இப்படியாகப்பட்ட குழப்பங்கள், ஒவ்வொரு உயர்கல்வி படிப்பிற்கும் இது தேவை, இது தேவையில்லை என்ற முடிவை மேற்படிப்பிற்கு ஏற்றாற்போல் அடிப்படை கல்வியை MCI போன்ற ஒவ்வொரு மேற்படிப்பு நிறுவனங்களும் நிர்ணயிக்குமானால், பிறகு பள்ளிக்கல்வி துறை  எதற்காக? பள்ளிக்கல்வி அடிப்படையானது, அனைத்து மேற்படிப்பிற்கும் பொதுவானது. இதனை குறிப்பிட்ட மேற்படிப்பிற்காக வடிவமைப்பதும் மாற்றுவதும் பள்ளிக்கல்வியை ஈடு செய்ய இயலாத இழப்பிற்கு இட்டுச்செல்லும். Physics-ல் தேவைப்படும் அணுக்கொள்கை Chemistry பாடத்திட்டம் வரும்போது மருத்துவ படிப்பிற்கு தேவையில்லை என்ற MCI-யின் நிலைப்பாட்டை ‘நீட்’ற்கு வக்காலத்து வாங்கும் கல்வியாளர்கள் தான் விளக்க வேண்டும்.

6.நீட் பலமுறை வாய்ப்பு தரும்:

இது சட்டையை கிழித்துக்கொண்டு நம்பிக்கையோடு பரீட்சை எழுதும் அடுத்தத் தலைமுறை. கொள்கை தெளிவற்ற நீட்டினால் பாதிக்கப்படும் அவலத்திற்கு மற்றும் ஒரு காரணம். மற்றும் ஒரு உச்சநீதிமன்ற வழக்கு. ராய் சபேசாக்ஷி என்பவர் உச்சநீதிமன்றம் செல்கிறார். நீட் தேர்வு எழுதுவதற்கு 25 வயது உச்ச தகுதியாக இருந்தது. இந்த வயது வரம்பிற்கு இன்று தடைவித்துள்ளது டெல்லி உயர்நீதி மன்றம். 3 வாய்ப்பு மட்டுமே இருப்பதும் வயது வரம்பும் தங்களை பாதிப்பதால் அதனை நீக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தார். உச்சநீதிமன்றம், நடைமுறை  பிழைகளைக் காரணம் காட்டி சென்ற ஆண்டு எந்த வயது வரையிலும் தேர்வு எழுத அனுமதி வழங்கியது (இந்த வருடம் 25 வயது உச்ச வரம்பாகவும் அதுவரை எத்தனை முறையும் தேர்வு எழுதத் தடை இல்லை). மேற்கூறிய வழக்கில் மனுதாரர்கள் வேறு பட்டப்படிப்பை முடித்துவிட்டு மீண்டும் எம்.பி.பி.எஸ்.எனும் பட்டப்படிப்பை படிப்பதற்குத் தடையாக இருப்பதால் வயது மற்றும் அமர்வு வரம்பிற்கு விலக்கு கோரியது குறிப்பிடத்தக்கது. 

ஆஹா!!! அருமையான வாய்ப்பாக இருக்கிறதே! என்று நினைப்பவருக்கு, ஒரு 17 வயது மட்டுமே நிறைந்த +2 மாணவன், அதன் பிறகு Physics, Chemistry, Biology ஆகியவற்றை பிரதான பாடமாக 3 வருடம் Degree, பிறகு பட்டமேற்படிப்பு, அதன் பிறகு ஏனைய சிறப்பு படிப்புகளும் முடித்து, மேற்கூறிய +2 மாணவனுக்கு ஆசிரியராகும் தகுதியை ஒருவர் 25 வயதிற்குள் பெற்று விட முடியும்.

தமிழக கடைக்கோடி கிராமத்தில் படிக்கும் ஒரு அரசுப் பள்ளி மாணவன் பட்டப்படிப்பு முடித்தவருடனும், பட்ட மேற்படிப்பு படித்தவருடனும், தனக்கு பாடம் சொல்லிக்கொடுக்கவல்ல ஆசிரியருடன் நீட் தேர்வில் போட்டியிட வேண்டும் என்றால் இது சமமான தரமா? IIT JEE நிபுணர் குழு கூறும் பரிந்துரையில் கூறப்பட்டது போல பல லட்சங்களை செலவழித்து Coaching செல்பவரும், Physics, Chemistry, Biology- பட்ட மேற்படிப்பு படித்த மாணவனும், 17 வயது +2 மாணவனும் சம வாய்ப்பு உரியவர்கள் என்று இந்த நீட் தேர்வு நிர்ணயம் செய்வதை எந்தப் பெற்றோராலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. 

41/2 ஆண்டுகள் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு,  தகுதி  வரையறையான 17 வயதிற்கு மேல் 13 (25வயது +5) வருடங்கள் வரை நீட் நுழைவுத்தேர்வு வாய்ப்பு என்பது கல்வி வரலாற்றில் ஒரு புதிய மைல்  கல்தான்!! ...அட, இதுதான் எதார்த்தம் என்றால் இதே மத்திய அரசு இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்த ஊக்கத்தொகை வழங்க நடத்தும் KVPY எனும் தேர்வு தெளிவான வித்தியாசங்களை கொண்டுள்ளது.

பள்ளிக்கல்விக்கும், கல்லூரி கல்விக்கும் இடையே மட்டுமல்ல, பள்ளிக் கல்வியிலேயே +1 மாணவர்களுக்கு ஒரு கேள்வித் தாளாகவும், +2 மாணவர்களுக்கு ஒரு கேள்வித் தாளாகவும், கல்லூரி முதலாம் ஆண்டு படிப்பவருக்கு மற்றும் ஒரு கேள்வித் தாளாகவும் தரம் பிரிக்கிறது. ஐயா, பள்ளி அளவிலேயே +1 மாணவனின் திறனும் +2 மாணவனின் திறனும் வேறானது. கல்லூரி முதலாம் ஆண்டு மாணவரின் தரம் இன்னும் மேற்பட்டதாக அறியும் மத்திய அரசு நீட்டில் மட்டும் சறுக்கியதன் பின்னனி என்ன?

சபேயசாக்ஷி வழக்கில் பட்டப்படிப்பு படித்தவருக்கு நீட் வாய்ப்பு வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் நிராகரிக்கவில்லை. போட்டித்தேர்வு மன அழுத்தம் என்றால் போட்டியில் சமமற்றத்தன்மை, வக்கிரத்தின் உச்சம். தமிழ்நாட்டில் நீட் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே +2-விற்கு பிறகு ஒன்றிற்கு மேற்பட்ட முறை நீட் தேர்வு எழுதியவர்களால் சற்றேறக்குறைய மூன்றில் ஒரு பங்கில் இருந்து ஒரு பாதி வரையிலான மருத்துவ இடங்கள் தமிழ்நாட்டில் பெறப்பட்டுள்ளன. இதன் அபாயம் என்னவென்றால், இளம் மாணவன் பயிற்சி என்ற பெயரில் வருடங்கள் கடப்பதையும், புது மாணவர்களின் வாய்ப்புகளை பறிப்பதாக ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரங்களில் லட்சங்களில் மாணவர்கள்  தேங்கி விடுவது கல்வித்துறைக்கு பொருத்தமல்ல. சில வருடங்களில் முதல் அமர்வில் நீட் எம்.பி.பி.எஸ். சேர்வது குதிரைக் கொம்பாகிவிடும். அப்போது ஏழை எளிய அரசு மாணவர் மட்டுமல்ல, மத்தியத் தர, உயர் செல்வ பின்னணி கொண்டவரின் பிள்ளைகளுக்கும் மருத்துவக் கல்வி அரிதாகிப் போன ஒரு கனவாகவே ஆகிவிடும்.

7.  All India Survey of Higher Education (AISHE) 2014 - 15 கடந்த வருடங்களில் ஒரு முக்கிய செய்தியைக் கூறுகிறது. பெண்கள் பயிலும் பட்டப்படிப்பில் ஆண்களுக்கு சமமாகவோ அல்லது ஆண்களை விட அதிகமாகவோ பெண்கள் இடங்கள் பெறும் மிக சொற்பமான படிப்பில் மருத்துவ வகை படிப்பு (medical stream)  தனித்தன்மை பெறுகிறது. 25 வயது வரையிலும் (அதுவும் நீக்கப்படலாம்) பலமுறை எழுத வாய்ப்பு தரும் நீட் எளிய மாணவர்களை மட்டுமல்ல, பெண்களையும் ஓரங்கட்டும். ஏற்கெனவே 51/2 வருட படிப்பு அதை பெறவும், ஒரிரு வருடங்களாவது காத்திருக்க வேண்டும் என்ற நிலையில் பெண்கள் மருத்துவப்படிப்பு படிக்கும் சதவீதம் இன்னும் சில வருடங்களில் பாதாளத்தை நோக்கி செல்லும். மத்திய அரசின் திட்டங்களை கொள்கைகளை உருவாக்குபவர்கள் இதனை எளிதில் கடந்து போவது எனக்கு மிகவும் வியப்பளிக்கிறது. மத்திய அரசு தற்போதைய நாட்டின் மருத்துவ அவசர நிலையைக் கருதி செயல்படுத்தும்  இந்த நீட் திட்டம் தமிழகத்தைப் போல் வேறு எந்தப் பகுதியையும் பாதிக்காது.

8.  Tendulkar Committee, Rangarajan கமிட்டிகளின்  வறுமைக்கோடு விவரம் நாம் அறிந்ததே. இலவசக் கல்வி, மதிய உணவு, பஸ் பாஸ் போன்ற மற்றும் பல திட்டங்களால் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவரும் வாய்ப்பு பெற்று கல்வி பெறும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவெங்கும் உள்ள வறியவர்கள் எவ்வாறு நீட் தேர்வு கட்டணமான ரூ.1400/- கட்ட முடியும்? பிள்ளைககளின் உணவுத்தேவையை நிறைவேற்றக்கூட வழி இல்லாதவர் கட்டணம் செலுத்துவதும் பெரு நகரங்களில் தேர்வு எழுதுவதும் எவ்வாறு சாத்தியம்.

இந்தியா இப்போது புது இந்தியாவாக உருவாகியுள்ளது. அது இல்லாதவர்களுக்கு முடிவாக வாய்ப்பு மறுக்கும் ஒன்றாகவும், இருப்பவர்களுக்கும் கூட கல்வி நிச்சயமற்ற நிலை என ஒரு புதிய சமநிலை கொண்டிருக்கும் ஒன்றாக உருவெடுத்திருப்பது  உண்மையில் வியக்கத்தக்கது.


“மெய்பொருள் காண்பது அறிவு”

நாம் தற்போது செய்ய வேண்டியவை அல்லது  வாய்ப்பு.
• நீட் என்னும் உத்தம வில்லனின் உண்மை முகத்தை அறிவது.
• அரசியல் அமைப்புச்சட்டம் 371 பிரிவு வழங்கியுள்ள சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தை கொண்டு உருவாக்கிய,  தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தால் செயல்பட்டுக்கொண்டிருக்கிற மற்றும் விரிவாக்கம் பெற்றுக் கொண்டிருக்கிற மருத்துவக் கல்லூரிகளின் மேல் உள்ள    நமது உரிமையை நிலை நாட்ட வேண்டும்.
•  "விளக்கின் பிரகாசத்தை பகிர்ந்து கொள். ஆனால் அதில் இருந்து எண்ணையை எடுக்க சம்மதிக்காதே"என்பது முதுமொழி. 

இந்தியர்களே அல்லாத வெளிநாட்டினரும், இந்திய Passport இல்லாத நபர்களும் போட்டியிட வழி செய்யும் நீட்டின் உலகளாவிய தேவை என்னவென்று புரியவில்லை. தமிழகத்தின் வளம் மருத்துவக்கல்லூரிகள். இது போல் உருவாக்க தவறிய மத்திய மற்றும் ஏனைய அரசுகளின் இயலாமைக்கு தமிழ் பிள்ளைகள் என் விலை கொடுக்க வேண்டும். நீட்டினால் அப்படி என்னதான் பெற்றோம். இவைகளை இழப்பதற்கு? இதில் அண்டை மாநிலங்களில் இருந்து போலி சான்றிதழ்கள் கொடுத்து தமிழக இடங்களை பெறுவதற்கான படையெடுப்பு வேறு. நீட் அறிமுகமாகிய முதல் ஆண்டிலேயே கேரளா, கர்நாடகா மட்டுமல்லாது வட இந்திய மாநிலங்களில் இருந்தும் கூட தங்களை தமிழகத்தை இருப்பிடமாகக் கொண்டவர்கள் என்று உரிமை கோரி இடம் பெற்றவர்களது எண்ணிக்கை ஏராளம். நீட் ஒரு மாணவருக்கு 2 விதமான இட ஒதுக்கீட்டை தருகிறது. 15% மத்திய தொகுப்பு மற்றும் 85% அந்த மாணவர்கள் சார்ந்த மாநில தொகுப்பு. 
பல்வேறு வழக்குகளின் காரணமாக கடந்த ஆண்டு தமிழகத்தின் நீட் தேர்வு முடிவு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின்  நீட் முடிவுகள் வெளியான பின்பே வந்தது . தமிழகத்தில் அதிக இடங்கள் உள்ளதால் கட் ஆஃப் குறைந்தது. இதனை வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் உரிமைக் கோரினர். அவர்கள் அனைவரும் நமது முடிவு வெளியாவதற்கு முன்னரே கேரளா, கர்நாடகா, மற்றும் இன்னபிற மாநிலங்கள் வெளியிட்ட நீட் ரிசல்ட் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இது மிகப்பெரிய சட்ட மோசடி. ஒரு மாணவன் தனது பகுதியைச் சார்ந்தவன் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி செயல்படும் ஒரு மாநிலம் அறிவித்து, அவர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். அரசு மற்றும் தனியார் ஒதுக்கீட்டில் தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்ட பின், தகுதி இழந்த அந்த மாணவர் அடுத்த வருடம் நீட் எழுதிதான் முயற்சி செய்ய வேண்டும்.

நீட் மத்திய அரசுப் பட்டியலில் தகுதி பெறவில்லை. மேலும் தான் விண்ணப்பித்த மாநில அரசுப் பட்டியலிலும் தகுதி பெறவில்லை. ஆனால் சட்ட விரோதமாக தமிழகத்தில் வந்து மருத்துவ சீட்டுகளை விழுங்கும் இவ்வகை நபர்கள்தான் நிச்சயம் நீதிமன்றம் சென்று சட்டப்படி தனக்கு தகுதி அதிகம் இருப்பதாக காட்டி, நேரடியாக தமிழகம் புகுந்து இடங்களை எடுத்துச் செல்வர். இதனை புரிந்தும் புரியாதவர் போல் இருப்பவர்கள் தம் பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்கும் சொத்து ஏமாற்றம் மட்டுமே.

ஓடுவதும் உழைப்பதும் அவரவர் பிள்ளைகளுக்காகவே. அதிகப்படியான தமிழக இடங்களை குறிவைக்கும் 'நீட்'டினால், இட ஒதுக்கீடு பிரிவினர் மட்டும் அல்ல முன்னேறிய வகுப்பினரும் தம் உரிமையை நீதி மன்றங்களின் தலையீடுகளால் இழக்கக் கூடிய நிலையில், "இழப்பில் வலியவன் என்ன? வறியவன் என்ன?  அனைவருக்கும் இழப்புதான்" என்பதை அனைவரும் உணரவேண்டும்.பெண்களுக்கான மருத்துவக் கல்வி தேய்ந்து, ஒழிந்து அதற்கு தனி இட ஒதுக்கீடு பெரும் அவல நிலைமை நோக்கி செல்லும். நீட் இருக்கிறதோ இல்லையோ தமிழகத்தில் நம் பிள்ளைகளுக்கு சீட் நிச்சயம் இருக்கிறது என்ற நம்பிக்கையை  நிலைநிறுத்த வேண்டும்.

    


Advertisement

Advertisement
[X] Close