[X] Close

ஐபிஎல் 2018: சேவாக் ஸ்டைலில் ஒரு ’தாறுமாறு’ பேட்ஸ்மேன்!

IPL-2018--Mayank-Agarwal

’ஐபிஎல்-போட்டிக்கு அறிமுகமானவர்தான் என்றாலும் மயங்க் அகர்வாலின் அதிரடியை இந்த வருடம்தான் பார்க்கப் போகிறார்கள், ரசிகர்கள்’ என்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். ஏனென்றால் சமீபத்திய அவரது ஆர்ப்பாட்ட, ஃபார்ம்! 

கர்நாடக அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான மயங்க் அகர்வால், ஷேவாக் மாதிரியான பேட்டிங் ஸ்டைலை கையாள்பவர். அதாவது எந்த தாறுமாறு பந்தையும் தாறுமாறாக இழுத்துப் பிடித்து விளாசுவது!


Advertisement

2009-ம் ஆண்டில் ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்ற அகர்வால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளாசிய அந்த 160 ரன்கள், அபாரம். அந்தப் போட்டியில் கவனிக்கப்பட்ட அகர்வால், இந்தியா ’ஏ’ அணியில் இடம்பிடித்தார். அதில் எல்லாம் பெரிய ஸ்கோரை எட்டிப்பிடிக்க முடியாமல் ஓரமாக இருந்த அவரது இப்போதைய ஃபார்ம், எல்லோரையும் ஆஹா எனச் சொல்ல வைத்திருக்கிறது.

சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 633 ரன்கள் குவித்து சாதனை படைத்திருக்கிறார். இதில் மூன்று சதங்களும் மூன்று அரை சதங்களும் அடங்கும். நாளை (27.02.2018) நடக்கும் ஃபைனலில் இவர் இன்னும் ரன்கள் குவித்தால் இந்தச் சாதனை ரன்கள் அதிகரிக்கும். இதற்கு முன் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், கடந்த வருடம் 9 போட்டிகளில் 607 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. அதை முறியடித்திருக்கிறார் அகர்வால்!

இந்திய ஏ அணியின் பங்கேற்ற மயங்க் அகர்வால், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கணிசமான ரன்களை அள்ளியிருக்கிறார். அப்போது ஏ அணி பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், அகர்வாலுக்கு கடுமையான பயிற்சியோடு அட்வைசையும் கொடுக்க, அதை உறுதியோடு பின்பற்றிய அகர்வால், உடலை ஃபிட்டாக்கி, ஆக்ரோஷ கிரிக்கெட்டர் ஆனது அதுக்குப் பிறகுதானாம். கடும்பயிற்சியில் ஈடுபட்ட பின், அப்போது நடந்த ரஞ்சி போட்டியில் முதல் சதம் அடிக்க, முழு நம்பிக்கை பற்றிக்கொண்டது அவருக்கு. பிறகு ஒவ்வொரு போட்டியிலும் தன்னை நிருபித்திருக்கிறார் மயங்க் அகர்வால்.

ஐபிஎல்-லில் 2011-13 வரை பெங்களூ ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இருந்த மயங்க் அகர்வால், அதிகமான போட்டிகளில் விளையாடவில்லை. காரணம் மோசமான ஃபார்ம். பிறகு 2014-ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்குச் சென்றார். அங்கும் அதே பிரச்னை. இப்போது ஒரு கோடி ரூபாய்க்கு இவரை ஏலத்தில் எடுத்திருக்கிறது பஞ்சாப் அணி. ‘பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரராக இந்தாண்டு நிச்சயம் மிரட்டுவார். அதில் மாற்றுக்கருத்தே இல்லை’ என்று மல்லுகட்டுகிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், சமீபத்திய போட்டிகளில் அவர் குவித்த ரன்கள்!

2017-2018-ல் நடந்த ரஞ்சிப் போட்டியில் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார் அகர்வால். இதில், மகாராஷ்டிராவுக்கு எதிராக அடித்த முச்சதமும் ஒன்று. 
 


சமீபத்தில், இலங்கையில் நடக்கும் மூன்று நாடுகள் கிரிக்கெட் போட்டிக்கு வீரர்களை அறிவித்திருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம். தோனி, கோலி, பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், பும்ரா என முக்கியமான வீரர்களுக்கு ஓய்வு கொடுத்திருக்கும் சூழலில், இவரைச் சேர்க்காதது சர்ச்சையாகி இருக்கிறது. 

‘ஃபார்மில் இல்லாத சிலரை அணியில் சேர்த்திருக்கும்போது, உள்ளூர் போட்டிகளில் இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வாலை சேர்க்காதது ஏன்? இதுதான் திறமைக்கு கொடுக்கும் மரியாதையா?’ என்று சமூக வலைத்தளங்களில் கேள்விக் கேட்கத் தொடங்கியுள்ளனர் ரசிகர்கள்!

யார்  சொல்வது இதற்கான பதிலை?
 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close