
48 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸால் செய்ய முடியாததை, 48 மாதங்களில் பாரதிய ஜனதா ஆட்சி செய்து முடித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மேலும் புதுச்சேரியில் ஆட்சி நிர்வாகம் சரியில்லை எனவும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரியை அடுத்து ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இந்த நகரம் உதயமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. இதன் பொன்விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இதனையடுத்து புதுச்சேரி ஆரோவில்லில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது பேசிய அவர், 48 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸால் செய்ய முடியாததை, 48 மாதங்களில் பாரதிய ஜனதா ஆட்சி செய்து முடித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், புதுச்சேரியில் இளைஞர்கள், பெண்கள் முன்னேறுவதற்கான சூழல் நிலவுகிறதா என்றும் கேள்வி எழுப்பினார். 10 ஆண்டுகளாக புதுச்சேரி மக்கள் வளர்ச்சிக்கு ஆட்சியாளர்கள் தடையாகவுள்ளதாகவும் பிரதமர் குற்றஞ்சாட்டினார். அது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். மேலும், சுதந்திர இந்தியாவை, 48 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி செய்யாத பல வளர்ச்சித்திட்டங்களை, பாரதிய ஜனதா செய்து முடித்துள்ளதாகவும் பிரதமர் பெருமிதத்துடன் பேசினார்.