Published : 24,Feb 2018 07:49 AM
காவிரி சிக்கல்: சில மாற்று வழிமுறைகள்

காவிரி நீரைப் பெறுவதற்காகப் போராடும் அதே நேரத்தில் நமது விவசாயத்தை மேம்படுத்துவதற்கான மாற்று வழிமுறைகளைப் பற்றியும் நாம் சிந்தித்தாக வேண்டும். காவிரிப் பிரச்சனைக்காக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுகவின் சார்பிலும் வேறு சில அமைப்புகளின் சார்பிலும் நீர்நிலைகளைத் தொடர்ந்து தூர்வாருதல், விவசாயத்துக்கென தனி பட்ஜெட், நீர் மேலாண்மைக்கென தனி அமைச்சகம் உள்ளிட்ட சில யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செய்யப்படும் நிலத்தின் பரப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. அதை அக்கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சரும் கவலையோடு பதிவு செய்தார். அப்படி குறைந்து வருவதற்கு வறட்சி மட்டுமே காரணம் அல்ல. விவசாய நிலங்கள் மற்ற பயன்பாடுகளுக்காக எடுக்கப்படுவதும் ஒரு முக்கியமான காரணமாகும். உயர்நீதிமன்றம் அதில் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தபோதிலும் விவசாய நிலங்கள் வேறு பயன்பாடுகளுக்கு மாற்றப்படுவது முற்றாக நின்றுவிடவில்லை.
’கடன்சுமை காரணமாக விவசாயிகள் உழவுத்தொழிலில் ஈடுபட முடியாத சிக்கலில் உள்ளனர், அதனால்தான் உற்பத்தி குறைந்து விட்டது’ எனச் சொல்லப்பட்டது. ஆனால், அது ஓரளவே உண்மை. 2006 ஆம் ஆண்டு அன்றைய திமுக அரசு ஏழாயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தது. கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது மட்டுமின்றி புதிதாக வங்கிகளின் மூலம் கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதனால் விவசாயம் செய்யும் நிலங்களின் பரப்பு அதிகரித்துவிடவில்லை. விளை நிலங்களின் பரப்பை உயர்த்துவதற்கு பாசன வசதியைப் பெருக்குவது நிபந்தனையாகும்.
காவிரியில் தண்ணீர் வராதது மட்டுமின்றி நமது நீர் நிலைகளை நாம் சரியாகப் பராமரிக்காததும் வேளாண் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு ஹெக்டேரில் விளையும் தானியத்தின் அளவை எடுத்துக் கொண்டால், உலக அளவிலான சராசரியை விட இந்திய உற்பத்தி இருபத்தாறு விழுக்காடு குறைவாக உள்ளது என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அதற்கானக் காரணங்களில் தண்ணீர் பற்றாக்குறையும் ஒன்று. காவிரி தண்ணீரில் நமக்கிருக்கும் உரிமையை நிலைநாட்டுவதோடு மாற்று நீர் ஆதாரங்களையும் நாம் மேம்படுத்தவேண்டும். அதில் ஏரிகள், கிணறுகள் முதலானவற்றுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
ஏரிகள்:
தமிழகத்தில் நெல் விளைவிக்கப்படும் பகுதிகளில் பாசனத்துக்கு ஏரிகள் முக்கிய பங்காற்றி வந்துள்ளன. வறட்சி காலங்களிலும் தொடர்ந்து விவசாயம் செய்ய ஆற்றுப் பாசனத்தைவிட ஏரிப் பாசனமே நல்லது என்பதை நமது முன்னோர்கள் தெளிவாகவே புரிந்து வைத்திருந்துள்ளனர். அதனால்தான் ஆயிரக்கணக்கான ஏரிகளை உருவாக்கியதோடு அவற்றை முறையாக அவர்கள் பாதுகாத்தும் வந்திருக்கிறார்கள். மழைநீரைத் தேக்கி வைக்கும் ஏரிகள், ஆறுகளிலிருந்து கண்மாய் வழியாக நீரைக் கொண்டுவந்து தேக்கி வைக்கும் ஏரிகள் என இரண்டு வகையான ஏரிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி தமிழ்நாட்டில் 29,202 ஏரிகள் இருந்தன. அவற்றில் மழைநீரைத் தேக்கி வைக்கும் வகையான ஏரிகளே அதிகம். பெரும்பாலான ஏரிகள் இருநூறு ஹெக்டேருக்குக் குறைவான நிலப்பரப்புக்குப் பாசன வசதி அளிப்பவையாக உள்ளன.
தமிழகத்தில் சுமார் ஒன்பது லட்சம் ஹெக்டேர் நிலங்கள் ஏரிப்பாசனத்தை நம்பியிருக்கின்றன. முன்பு இருந்த ஏரிகளில் இப்போது சுமார் ஆயிரம் ஏரிகள் காணாமல் போய்விட்டன. அவற்றை வீடுகட்டவும், வேறு பயன்பாடுகளுக்கும் எடுத்துக் கொண்டுவிட்டதால் அவற்றால் பாசன வசதி பெற்ற நிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாய நிலப் பரப்பு குறைந்துள்ளது.
கிணறுகள்:
ஏரிகளைப் போலவே நாம் கிணறுகளின் மீதும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தமிழ்நாட்டில் சுமார் பத்தொன்பது லட்சம் கிணறுகள் உள்ளன என 2007 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரம் கூறுகிறது. அவற்றின் மூலம் பன்னிரண்டு லட்சம் ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கிணறுகளில் எட்டு சதவீத கிணறுகள் தூர்ந்துபோய் கிடப்பதாகத் தெரிகிறது. கிணறுகளின் மூலம் கிடைத்து வந்த தண்ணீரின் அளவும்கூட படிப்படியாகக் குறைந்துவிட்டது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கிணற்றின் மூலம் சராசரியாக ஐந்து ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டது. இப்போதோ ஒரு ஏக்கருக்குத்தான் அந்தத் தண்ணீர் பயன்படுகிறது. இருக்கின்ற கிணறுகளைத் தூர்வாரி அவற்றின் திறனைக் கூட்டுவதோடு மேலும் புதிய கிணறுகளைத் தோண்டவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் புதிதாக சுமார் ஒன்பது லட்சம் கிணறுகளைத் தோண்டுவதற்கு வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒருங்கிணைந்த நீர் ஆதார அமைப்பு:
நமது வேளாண் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு தென்னக நதிகளை இணைக்க வேண்டும் என்பது பற்றி இப்போது அதிகம் பேசப்படுகிறது. நதிகளை இணைப்பதில் உள்ள பிரச்னைகளை சூழலியலாளர்கள் எடுத்துக்கூறி எச்சரித்து வருகின்றனர். கோடிக் கணக்கான மக்களின் இடப்பெயர்வுக்கும் சூழல் கேட்டுக்கும் வழிவகுக்கும் ’நதிகள் இணைப்புத் திட்டத்தை’விடவும் நமது மாநிலத்தில் உள்ள ஏரிகளை இணைத்து அவற்றின் தண்ணீரை சரியாகப் பயன்படுத்துவதற்கு நாம் முன்னுரிமை அளிக்கவேண்டும்.
நமது மாநிலத்தில் உள்ள ஏரிகளை நவீனப்படுத்தி, அவற்றை முடிந்த அளவு கால்வாய்களால் இணைத்து, ஒருங்கிணைந்த நீர் ஆதார அமைப்பை ( water resource Grid ) உருவாக்குவதன் மூலம் ஓரிடத்தில் உபரியாக உள்ள நீரை பற்றாக்குறை பகுதிகளுக்குக் கொண்டு செல்ல முடியும். அதன் மூலம் தொடர்ச்சியாக சாகுபடியை செய்வது சாத்தியமாகும். இதில் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளை ஈடுபடுத்த, ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை உருவாக்கிட தமிழக அரசு முன்வரவேண்டும்.
மண் மேலாண்மை:
மண் மேலாண்மை நடவடிக்கைகளின் மூலமும், ஏரிகளின் நீர்ப்பிடிப் பகுதிகளை செப்பனிட்டு அவற்றின் திறனை அதிகரிப்பதன் மூலமும் ஏரிகளின் திறனைக் கூட்ட முடியும். தற்போது தமிழ்நாட்டில் பத்தொன்பது மண் பரிசோதனை நிலையங்களும், பதினாறு நடமாடும் மண் பரிசோதனை நிலையங்களும் உள்ளன. இவை போதாது. இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிலங்கள் யாவும் மண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அந்த விவரங்களின் அடிப்படையில் விவசாயிகளுக்கு இடுபொருட்களும், ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இது தமிழகத்தில் உள்ள அனைத்து நிலங்களுக்கும் செய்யப்பட்டால் உற்பத்தி நிச்சயம் கூடும்.
காவிரி மற்றும் பிற நதிநீர்ப்பாசனப் பகுதிகளில் சுமார் ஒன்றரை லட்சம் ஹெக்டேர் நிலம் உவர் தன்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு கூறியுள்ளது. அந்த நிலங்களை மேம்படுத்திப் பயன்படுத்த துரிதமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும்.
நீர் தணிக்கை:
நீர் ஆதாரங்களை பாழ்படுத்தும் தொழிற்சாலைகளைக் கடுமையாக தண்டிப்பதோடு, நீர் தணிக்கை ( water audit ) முறையைக் கொண்டு வருவதன் மூலம் நமது மாநிலத்தில் கிடைக்கிற தண்ணீரைத் திறம்படப் பயன்படுத்த வழி வகுக்கலாம். நமது மாநிலத்தின் நீர் வளங்களை மேலாண்மை செய்ய, நீர்வளத்துறைக்கென தனி அமைச்சகத்தை உருவாக்குவது அவசியம் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. மத்திய அரசில் மட்டுமின்றி மாநிலங்கள் பலவற்றிலும் இப்படியான தனி அமைச்சகம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. எனவே இதைத் தமிழக அரசும் பரிசீலிக்கவேண்டும்.