Published : 24,Feb 2018 07:17 AM
ஆஹா, அபார கேட்ச்: பாராட்டில் நனையும் அப்ரிடி

'அப்ரிடி 38 வயதை நெருங்க போகிறார் என்கிறார்கள். இந்த கேட்சைப் பார்த்த பின், நான் சொல்வேன், அவருக்கு வயது 32-தான்’
-பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி, நேற்று அந்த கேட்சைப் பிடித்தபோது கமென்ட்ரி பாக்ஸில் இருந்த வந்த வார்த்தைகள் இவை.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஷாகித் அப்ரிதி. சர்வதேச போட்டியில் இருந்து விலகிய பின் பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். இப்போது, பாகிஸ்தான் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த போட்டியில் கராச்சி கிங்ஸ் அணியும் குவட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் மோதின. குவட்டா அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தது. கராச்சி அணி சார்பில் 13 வது ஓவரை முகமது இர்பான் வீசினார். பந்தை எதிர்கொண்ட உமர் அமின், அதை சிக்சருக்குத் தூக்க எல்லைக்கோட்டில் நின்ற அப்ரிடி அதை துள்ளிப் பிடித்தார். ஆனால், கீழே விழுந்தால் பாதம் எல்லைக் கோட்டில் படும் என்பதால் பந்தை தூக்கி போட்டுவிட்டு பிறகு பீல்டுக்குள் வந்து அதை மீண்டும் பிடித்தார்.
அவர் பிடித்த இந்த கேட்ச் நேற்று அவருக்கு பலத்த பாராட்டைப் பெற்றுத் தந்தது. சமூக வலைத்தளங்களிலும் அவரது புத்திசாலித்தனமான கேட்சையும், இவ்வளவு வயசுக்குப் பின்னும் வாலிபன் போல அவர் விளையாடிய விதத்தையும் எல்லோரும் பாராட்டி வருகின்றனர்.
ஷாகித் அப்ரிடி, 398 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி, 8064 ரன்கள் குவித்துள்ளார். 395 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.