
நீட் தேர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதுடன், நீதிமன்றம் சென்று சட்டப் போராட்டம் நடத்தப் போவதாக கி.விரமணி தெரிவித்துள்ளார்.
மதுரை சிம்மக்கலில் திராவிடர் கழகத்தின் மண்டல ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சி தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீட் தேர்வுக்கு எதிராக வருகின்ற 22 ஆம் தேதி மாணவர்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு திராவிடர் கழகம் ஆதரவு தெரிவிக்கின்றது. நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்கள் ஓராண்டு ஆகியும், அதன் நிலை என்னவென்று தெரியவில்லை. தீர்மானம் தொடர்பாக கேட்பது சலுகை கிடையாது, உரிமை. அந்தத் தீர்மானம் தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். திராவிடர் கழகம் சட்டப் போராட்டத்தை தொடர உள்ளது. நீதிமன்றம் செல்ல முடிவு எடுத்துள்ளது.
மேலும் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று தீர்ப்பு அளித்துள்ளது. அந்தத் தீர்ப்புக்கு கட்டுபட மறுப்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு என கூறி நீட் தேர்வை அமல்படுத்திய மத்திய அரசு, காவிரி விவகாரத்தில் அலட்சியத்துடன் செயல்படக் கூடாது. உடனடியாக தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.
கடலில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும், ராமேஸ்வரம் மீனவர்களுக்கு 20 கோடி அபராதம் விதிக்க இலங்கை அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது. இதனை மத்திய அரசு வேடிக்கை பார்க்கின்றது. இந்தச் சட்டத்தை இலங்கை அரசு வாபஸ் வாங்க மத்தியரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.