பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி: பாஜக குற்றச்சாட்டில் முரண்படும் சிபிஐ அறிக்கை

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி: பாஜக குற்றச்சாட்டில் முரண்படும் சிபிஐ அறிக்கை
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி: பாஜக குற்றச்சாட்டில் முரண்படும் சிபிஐ அறிக்கை

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி முழுவதும் நடப்பு நிதியாண்டில் நடைபெற்றிருப்பது சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்த விவகாரம் இந்திய அளவில் பூதாகரமாகியுள்ள நிலையில் சிபிஐயும், அமலாக்கத்துறையும் அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. பாட்னா, ஜெய்பூர், துர்காபூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதில் இதுவரை ஐந்தாயிரத்து 674 கோடிக்கும் அதிகமான தங்க-வைர நகைகள் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி மற்றும் வங்கி ஊழியர் மனோஜ் காரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் , நிரவ் மோடி குழும நிறுவனங்களின் சார்பில் கையெழுத்திடும் அதிகாரம் கொண்ட ஹேமந்த் பத் என்பவரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் மோசடி என வர்ணித்த நீதிபதி எஸ்.ஆர்.தம்போலி, குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் 14 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

தொழிலதிபர் நிரவ் மோடி தொடர்புடைய இந்த மோசடி, 2011-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கிவிட்டதாக மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் குற்றம்சாட்டிவரும் நிலையில், சிபிஐ அறிக்கையில் அதற்கு மாறாக உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஓய்வு பெற்ற துணை மேலாளர் உள்ளிட்ட இரு அதிகாரிகள், நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு கடந்த ஆண்டில் சுமார் 300 உத்தரவாத கடிதங்களை அளித்ததன் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே 2011-ம் ஆண்டிலேயே இந்த மோசடி தொடங்கிவிட்டதாக கூறப்படும் கருத்துகளுக்கு முரணான வகையில் சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கை உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com