இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: இந்திய கிரிக்கெட் வாரியம் புது திட்டம்!
இந்திய கிரிக்கெட் அணி, ஜூலை மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட இருக்கிறது. 5 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டியில் இந்திய அணி பங்கேற்கிறது. ஜூலை 3-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 11-ம் தேதி வரை அங்கு சுற்றுப்பயணம் செய்கிறது. இங்கிலாந்து ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அதற்கான பயிற்சியில் இந்திய அணி ஈடுபட இருக்கிறது.
தென்னாப்பிரிக்கத் தொடருக்கு இந்திய அணி சென்றபோது பயிற்சிக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. இதனால் இங்கிலாந்து தொடருக்கு 10 நாட்களுக்கு முன்பே அங்கு சென்று பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க வழி செய்யப்படுகிறது.
இதுபற்றி கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தோம். அங்கு 10 நாட்களுக்கு முன்பே சென்று சரியான பயிற்சிப் பெற்றிருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும். அதைக் கருத்தில் கொண்டு இங்கிலாந்து டூர் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு வீரருக்கும் போதுமான நேரம் கொடுக்கப்படும். அங்குள்ள ஆடுகளத்தில் தேவையான நேரம் பயிற்சியில் ஈடுபடவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது’ என்றார்.