
மகா சிவராத்திரி விடுமுறையையொட்டி வட மாநிலத்தவர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தேக்கடியில் குவிந்தனர்.
வட மாநிலங்களில் மகா சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இரண்டு மூன்று நாட்கள் விடுமுறையும் வழங்கப்படுகிறது. இதனால் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமான தேக்கடிக்கு வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இடுக்கி மாவட்டத்தின் அருகே இருக்கும் தேனி மாவட்டத்தில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் தேக்கடிக்கு வந்திருந்தனர். ஆனால் படகுகளை வழக்கம் போல் காலையில் இயக்க போதிய ஆட்கள் இல்லாததால், மக்கள் படகு சவாரிகள் செல்ல தாமதம் ஏற்பட்டது.
மாலை வரை கூட்டம் அதிகமாக இருந்ததால் அனைத்து படகுகளும் முழு அளவிலான சுற்றுலா பயணிகளோடு இயக்கப்பட்டன. பொதுவாக பிப்ரவரி மாதம் தேக்கடியை பொருத்த அளவில் “ஆஃப் சீசன்”, அதாவது சுற்றுலா பயணிகள் இல்லாத மாதமாக கருதப்படுகிறது. இருப்பினும் இதுபோன்ற காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக கேரள வனத்துறையினரும், சுற்றுலாத்துறையினரும் தெரிவித்துள்ளனர்.