Published : 05,Mar 2017 02:11 AM
பெண் காவலர் வீட்டில் போலீஸ் கொலை

திருவள்ளூரில் நேற்றிரவு போலீசாருக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
திருவள்ளூரில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருபவர் சரண்யா. இவரது வீடு திருவள்ளூர் அருகே உள்ளது. அங்கு சரண்யாவுடன் பணிபுரிந்து வந்த சுந்தரபாண்டி என்ற காவலர் கத்தியால் குத்திக் கொலைச்செய்யப்பட்டுக் கிடந்தார். கொலை செய்யப்பட்ட சுந்தரபாண்டி, உசிலம்பட்டியைச் சேர்ந்தவர். இந்தக் கொலை தொடர்பாக, அமிர்தராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அமிர்தராஜ், சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் ஆவார்.
பெண் காவலர் சரண்யா வீட்டில் நடந்த கொலை சம்பவத்தில் அவரது சகோதரி மற்றும் அவரது தாத்தா ஆகியோரும் காயமடைந்துள்ளனர். பெண் காவலர் வீட்டில் கொலை நடந்தது எப்படி, ஆயுதப்படை காவலர்கள் அங்கு சென்றது ஏன்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சுந்தரபாண்டியின் நண்பர்களான, ஆயுதப்படை காவலர்கள் கள்ளையன், சந்தான குமார் ஆகியோரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் விசாரணை நடத்தினார்.