
ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கை சிந்தனையை ஆர்.எஸ்.எஸ்தான் அளித்ததாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்யப்படுவதாக கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். இதனால், பொதுமக்கள் பணம் கிடைக்காமல் ஏடிஎம் வாசலில் காத்துகிடந்து அவதிப்பட்டனர்.
இந்நிலையில், ராகுல் காந்தி, “ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கை எங்கிருந்து வந்தது என்பது தெரியுமா? அது ரிசர்வ் வங்கியிடம் இருந்து வரவில்லை. அதேபோல், நிதி அமைச்சகத்திடம் இருந்தும் வரவில்லை. இந்தக் குறிப்பிட்ட சித்தாந்தம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் இருந்து வந்தது. ஆர்.எஸ்.எஸ் தான் இந்த ஐடியாவை பிரதமருக்கு அளித்தார்கள். பிரதமர் மோடி அதனை நடைமுறை படுத்தினார்” என்று விமர்சித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் நாட்டின் அனைத்து துறைகளையும் கைப்பற்றுவதற்கான முயற்சிகளை செய்கிறது என்றும் ராகுல் காந்தி விமர்சித்தார். மேலும், ஆர்.எஸ்.எஸ் தனது அமைப்பினரை ஒவ்வொரு துறையிலும் நுழைய முயற்சிக்கிறார்கள் என்பதை மோகன் பகவத்தின் பேச்சு காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.