ராணுவத்துடன் ஆர்.எஸ்.எஸ்யை ஒப்பிடுவதா? - வலுக்கிறது எதிர்ப்பு

ராணுவத்துடன் ஆர்.எஸ்.எஸ்யை ஒப்பிடுவதா? - வலுக்கிறது எதிர்ப்பு
ராணுவத்துடன் ஆர்.எஸ்.எஸ்யை ஒப்பிடுவதா? - வலுக்கிறது எதிர்ப்பு

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் மோகன் பகவத் பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களிடையே நேற்று பேசிய மோகன் பகவத், “நாட்டு நெருக்கடி என்றால் ராணுவம் தயாராக 6 மாதங்கள் ஆகும், ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 3 நாட்களிலே தயாராகிவிடுவார்கள்” என்று கூறினார். இந்திய ராணுவத்தையும், ஆர்எஸ்எஸ்ஸையும் ஒப்பிட்டு மோகன் பகவத் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர்களை அவமானப்படுத்தும் விதத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் பேசியதாக பல்வேறு கட்சித் தலைவர்களும் விமர்சித்துள்ளன. #ApologiseRSS என்ற ஹேஷ்டேக்கில் மோகன் பகவத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கருத்தை பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

மத்தியில் ஆளும் பாஜக அரசை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பின்னால் இருந்து இயக்குவதாக காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் மோகன் பகவத்தின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதோடு, ஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், மோகன் பகவத் இவ்வாறு பேசியுள்ளார்.

இந்நிலையில் ராணுவம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு விளக்கமளித்துள்ளது. சாதாரண மனிதர்களால் செய்ய இயலாததை, ஒழுக்கப் பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ளும் ஆர்எஸ்எஸ் சேவகர்களால் எளிதில் நிறைவேற்ற முடியும் என்ற பொருள்படும்படி தான் மோகன் பகவத் பேசியதாக அந்த அமைப்பின் நிர்வாகி ‌வைத்யா விளக்கமளித்துள்ளார்.

மன்மோகன் வைத்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்.எஸ்.எஸ். தலைவர் முஸாபர்பூரில் பேசியது திரித்து கூறப்படுகிறது. மோகன் பகவத், ‘நாட்டில் போர் சூழல் ஏற்பட்டால், பொதுமக்களை தயார்படுத்த ராணுவத்திற்கு 6 மாதங்கள் ஆகும். ஆனால், அரசியலமைப்பு சட்டம் அனுமதித்தால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 3 நாட்களில் தயாராகிவிடுவார்கள். அந்த அளவிற்கு நம்முடைய அமைப்பு கட்டுப்பாடுகளுடன் உள்ளது’ என்று பேசினார். இதில், இந்திய ராணுவத்தையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் எங்கேயும் ஒப்பீடு செய்யவில்லை. இது, பொதுமக்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கும் இடையிலான ஒப்பீடு தான். இருவரும் ராணுவத்தினரால் தான் பயிற்சி செய்யப்படுவார்கள்.  

இதனிடையே, இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவ‌த்திற்கு காங்கிரஸ்‌ தலைவர் ராகுல் காந்தி கண்டனம்‌‌ ‌தெரிவித்துள்‌ளார். இது தொடர்பாக ட்விட்டரில்‌‌ ‌‌‌பதிவிட்‌‌டிருக்கும் அவர்,‌ நாட்டிற்காக இன்னுயிர் நீத்த‌‌வர்களை அ‌‌வமதிக்கும் விதமாகப் குறைவாகப்‌ பேசு‌வது ஒவ்‌வொரு ‌இந்தியனுக்கும் அவமானமாகும் என்று குறிப்பிட்‌டுள்ளார். தன‌‌து பேச்சுக்காக மோகன் பக‌வத், நாட்டு ‌மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

மோகன் பகவத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், அரசியலமைப்பு உரிமைகளுக்கு எதிராக அவரது பேச்சு உள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், இந்திய ராணுவத்தை சிறுமைபடுத்தும் வகையிலான் பகவத்தின் மத்திய அரசின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என்றும் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், மோகன் பகவத்திற்கு ஆதரவாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரென் ரிஜிஜு கருத்து தெரிவித்துள்ளார். மோகன் பகவத் தவறாக எதுவும் சொல்லவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி ராணுவத்தை வைத்து அரசியல் செய்கிறது என்றும் விமர்சித்தார். 

இதனையடுத்து, கிரென் ரிஜிஜுவின் கருத்தினை அடுத்து பாஜகவை ஆர்.எஸ்.எஸ் பின்னால் இருந்து இயக்குகிறது என்பது உறுதியாகியுள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் எம்.பி. பிரையன் ஓ’பிரையன் கூறுகையில், ‘கிரென் ரிஜிஜு ஒரு மத்திய இணை அமைச்சர் அல்ல, ஆர்.எஸ்.எஸ் அமைச்சர். அரசாங்கத்தின் ஒரு அமைச்சர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஆதரிக்கிறது, பாதுகாக்கிறது’ என்றார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com