Published : 09,Feb 2018 05:06 AM
சேஹல், குல்தீப் பற்றி அப்பவே தெரியும்: தேர்வு குழு தலைவர்

தென்னாப்பிரிக்காவில் சேஹலும் குல்தீப் யாதவ்வும் சாதிப்பார்கள் என்று எங்களுக்கு அப்போதே தெரியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறினார்.
வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜாவை நீக்கிவிட்டு சேஹல், குல்தீப்பை தென்னாப்பிரிக்க தொடருக்கு சேர்த்தது விமர்சிக்கப்பட்டது. தேர்வுக் குழுவினர் மீதும் விமர்சனம் வைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை வந்த இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் பிரசாத் கூறும்போது, ‘தென்னாப்பிரிக்காவில் சேஹல், குல்தீப் அசத்தி வருவது பற்றி எனக்கு ஆச்சரியம் ஏதும் இல்லை. அவர்கள் அங்கு சாதிப்பார்கள் என்று தெரியும். கடந்த மூன்று போட்டிகளில் அவர்கள் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள். இது வியக்கத்தக்க ஒன்று. ஒவ்வொரு போட்டியிலும் அவர்களின் நம்பிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 2019-ல் நடக்கும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் யார் யார் விளையாடுவார்கள் என்பது பற்றி கேட்கிறார்கள். அதை இப்போதே சொல்ல இயலாது. ஏனென்றால் அதற்கு இன்னும் 16 மாதங்கள் இருக்கிறது. ஆனால், இளம் வீரர்களுக்கு கண்டிப்பாக வாய்ப்புக் கொடுப்போம். ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற அணியில் பிருத்வி ஷா, சுபமன் கில், கம்லேஷ் நாகர்கோட்டி, ஷிவம் மவி போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இந்தியா ஏ அணிக்கான தொடரில் விளையாட அவர்கள் பரிசீலிக்கப்படுவார்கள்’ என்றார்.