லஞ்சம் பெற புது ரூட்: துணைவேந்தர் சிக்கியதில் சுவாரஸ்ய தகவல்கள்

லஞ்சம் பெற புது ரூட்: துணைவேந்தர் சிக்கியதில் சுவாரஸ்ய தகவல்கள்
லஞ்சம் பெற புது ரூட்: துணைவேந்தர் சிக்கியதில் சுவாரஸ்ய தகவல்கள்

லஞ்ச வழக்கில் கைதாகியுள்ள பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி லஞ்சப்பணத்தை காசோலையாக பெற்றது கேள்விக்குறியாக இருந்த நிலையில் தற்போது அதற்கான விடைக் கிடைத்துள்ளது.

துணைவேந்தர் கணபதி உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்காக சுரேஷ் என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் பெற்றதாகப் புகார் எழுந்தது. இதற்காக சுரேஷிடம் துணைவேந்தர் கணபதி 1 லட்சம் ரூபாய் ரொக்கம், 29 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தப் புகாரில், துணைவேந்தரின் வீடு மற்றும் பல்கலைக்கழகத்தில் உள்ள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது துணைவேந்தர் கணபதி லஞ்சம் பெற்றது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

சுரேஷிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கொடுத்தனுப்பிய ரசாயனம் கலந்த 28 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளும், மீதி பணம் உட்பட ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ராசாயனம் தடவிய நோட்டுகளை தங்கள் ஆடைக்குள் வைத்து எடுத்துச்சென்று கணபதியும், அவரது மனைவி ஸ்வர்ணலதாவும் கிழித்துப்போட்டதால், அவர்களின் கைகளை கழுவி அந்தத் தண்ணீரை ‌நான்கு பாட்டில்களில் சேகரித்துள்ளனர். அவர்களின் ஆடைகளும் ‌ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

கணபதி லஞ்சப்பணமாக காசோலைகளை பெற்றது ஏன் என்பது பல தரப்பிலும் எழுப்பப்படும் கேள்வியாக இருந்தது. காசோலை எனில் அதனை பணமாக மாற்ற வங்கியை நாட வேண்டும், வங்கிக்கணக்கில் வந்தால் அதற்கு கணக்கு காட்ட வேண்டிய நிலையும் ஏற்படும் எனில் கணபதி, காசோலையாக வாங்கியது ஏன் என்ற கேள்வி எழுந்தது.ஒரு லட்சம் ரொக்கம் போக, எஞ்சிய 29 லட்சம் ரூபாய்க்கு காசோலைகளை பெற்றுக்கொண்டு அதனை பிணையாக வைத்துக்கொண்டு சுரேஷ் லஞ்சத்தொகையை தரத்தர, காசோலையை திருப்பித் தருவதற்காகவே பெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த காசோலைகளை லஞ்ச ஒழிப்புத்துறையினர் இதுவரை கைப்பற்றவில்லை.

இந்நிலையில், கணபதி லஞ்ச பணத்தை காசோலையாக பெற்றதற்கு பின்னால் ஒரு வரலாறே உள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நேர்முகத்தேர்வு நடைப்பெற்றது. பணி நியமனம் டிசம்பர் மாதத்தில் நடைப்பெற்றது. இந்த இடைப்பட்ட காலத்தில் தான்  பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். ஓவர் நைட்டுல 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதனால் பொது மக்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என நாம் நினைத்துக் கொண்டிருக்கையில் கணபதி போன்ற லஞ்சப் பேர்வழிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்படி என்றால் இவர்களுக்கு வரவேண்டிய லஞ்சப்பணம் தாமதம் தான் இவர்களின் பாதிப்பு. இதற்கும் ஒரு தீர்வை கணபதி கண்டுபிடித்துள்ளார். கற்ற வித்தையை லஞ்சம் பெறுவதற்கு பயன்படுத்தியுள்ளார்.

தனக்கு வரவேண்டிய லஞ்சத்தொகைக்கு பதிலாக காசோலைகளை பிணயமாக வாங்கி கொண்டு லஞ்ச பணத்தை தவணை முறையில் பெற்று வந்தது தற்போது தெரியவந்துள்ளது. 30 லட்சம் முதல் 40 லட்சம் வரை லஞ்சம் பெற பண மதிப்பிழப்பு நடவடிக்கை தடையாக இருந்தாலும் லஞ்சம் பெற புதிய வழிமுறைகளை கையாண்ட துணைவேந்தராக இருந்த கணபதி , அப்படி தவணை முறையில் லஞ்சம் பெற்ற காசோலைகளை திரும்ப தருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதே வழிமுறையை பேராசிரியர் சுரேஷிடம் பின்பற்றி தற்சமயம் அவரது புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார் கணபதி. இப்படி காசோலை கொடுத்து லஞ்சம் தர தாமதம் செய்யும் பேராசியர்களை மிரட்டி பணம் பெற்று தருவதில் தர்மராஜும், வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள தொலைதூர கல்வி மைய பொறுப்பு இயக்குனர் மதிவாணனும் கைதேர்ந்தவர்களாகவும், வசூல் மன்னர்களாகவும் இருந்து வந்துள்ளனர். இவர்களை போல சிலரும் செயல்பட்டதாக புகார்கள் வந்துள்ளதால் அதற்கான ஆதாரத்தை திரட்ட லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com