Published : 04,Feb 2018 03:51 AM
இதுக்கு அவங்கதான் காரணம்: ராகுல் டிராவிட்டின் தன்னடக்கம்!

இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி, உலகக் கோப்பையை வென்றதற்கு முழுக்க முழுக்க அவர்களின் உழைப்பே காரணம் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறினார்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தில் நடந்தது வந்தது. நேற்று நடந்த இறுதி போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. இதில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு காரணம் ராகுல் டிராவிட்டின் பயிற்சிதான் என்று கூறப்பட்டது. இளம் இந்திய அணிக்கும் ராகுல் டிராவிட்டுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் போட்டிக்குப் பின் பேசிய ராகுல் டிராவிட், ‘இந்த இளம் அணியை நினைத்து பெருமையாக இருக்கிறது. இவர்களுக்கு உறுதுணையாக இருந்த உதவியாளர்களையும் பாராட்டுகிறேன். கடந்த 14 மாதங்களாக அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்ட விதம் சிறப்பானது. இப்போது வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள். இந்த வெற்றி, அவர்களின் மனதில் நீண்ட நாட்களாக நிலைத்து நிற்கும். இதோடு, இன்னும் பல நினைவுகளை வருங்காலத்தில் அவர்கள் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன். இந்த வெற்றிக்கு அவர்களே முழு காரணம். அவர்கள்தான் முனைப்புடன் செயல்பட்டு வென்றிருக்கிறார்கள்’ என்று தன்னடக்கத்துடன் கூறினார்.