Published : 03,Feb 2018 01:13 PM
ட்விட்டரில் ட்ரெண்டாகும் எஸ்.கே. இஸம்!

தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி, திரையுலகில் கதாநாயகனாக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இன்றுடன் இவர் திரையுலகிற்கு கால் பதித்து 6 வருடங்கள் ஆகின்றன.
மிமிக்ரி திறமை மூலம் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக சேர்ந்த சிவகார்த்திகேயன், திரையுலகில் 2012 ஆம் ஆண்டு மெரினாவில் தனது முதல் திரையுலக பயணத்தை தொடங்கினார். இதனையடுத்து தனுஷ் கதாநாயகனாக நடித்த 3 படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்தார் சிவா. அதன்பின் தனது நடிப்புத் திறமையால் ‘மனம் கொத்திப் பறவை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ போன்ற படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். இதையடுத்தது 2013 ஆம் ஆண்டு குஞ்சிதபாதம் கதாபாத்திரத்தில் ‘எதிர்நீச்சல்’ அடித்த சிவாவுக்கு அப்படம் பெரும் திருப்புமுனையாக இருந்தது. இப்படத்தில் 'சத்தியமா நீீ எனக்கு தேவையே இல்ல.. பத்து நாளா சரக்கடிச்சு போதையே இல்ல' என்ற பாடலுக்கு சிவாவுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டார் தனுஷ்.
இதையடுத்து ‘சிலுக்குவார் பட்டி சிங்கம் செம்பு கலக்காத தங்கமாக அவதாரம்’ எடுத்த எஸ்.கே., ‘வருத்தபடாத வாலிபர் சங்க’த்தில் செய்த சேட்டையை ரசிக்காதவர் யாரும் இல்லை. இனிமே எல்லாம் அப்டித்தான்.. என்ற வசனங்கள் மூலம் சிவனாண்டியை வருத்தெடுத்த போஸ் பாண்டியின் போஸ் அட்டகாசம். போஸ் என்றதும் நினைவில் வருவது ‘மான் கரத்தே’. சண்டைன்னு வந்தா மான் மாதிரி ஓடி ஒளிவதுதான் அர்த்தமாம். இதுவே மான் கரத்தே! போஸ் என்றால் இப்படிதான் கொடுக்கனனும்னு எல்லா இளசுகளையும் வசனம் பேசி ஈர்த்தார்.
தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த எஸ்.கே அடுத்து ஆக்ஷன் ஹீரோ வேடத்தில் போலீசாக களமிறங்கிய படம் ‘காக்கி சட்டை’. இப்படத்தில் நம்ம சிவாவா? பார்றா பில்ட் அப்பை என்று ஆடியன்ஸை வாய் பிளக்க வைத்தார். அடுத்து அலட்டிக் கொள்ளாமல் சைலண்ட்டா ரஜினிமுருகனில் எண்ட்ரிய போட்டு கிளம்பிட்டார்.
காமெடி, ஆக்ஷன், குணச்சித்திர வேடம் என பன்முகம் கொண்ட சிவகார்த்திகேயனுக்கு மிக பெரிய சவாலாக அமைந்த படம் ‘ரெமோ’. என்னை மாதிரி சாதாரண பசங்களுக்கெல்லாம் எல்லா வாய்ப்பும் கிடைக்காது. நாங்கதான் ஏற்படுத்திக்கணும் என கூறி ரெஜினா மோத்வானியாக ஜொலித்த ரெமோவை ஜொல்லுவிடாத பெண்களே இல்லை.. காமெடி கலந்த காதல் படமாக உருவெடுத்த படம் இது.
காமெடியாக சென்று கொண்டிருந்த ‘ரெமோ’ ஸ்டைல் திடீரென முதலாளிகள் செய்யும் விதிமீறல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள், லாபவெறி வேட்கைகளை ஆபீஸர் எதிர்த்து கேட்கமாட்டான், நிறுவனம் கேட்காது. ஆனால், வேலைக்காரன் கேட்பான் என சீரியஸாக களமிறங்கினார். பல சர்ச்சைகளுக்குப் பிறகு விறுவிறுப்பான திரைக்கதை, வலுவான கதாபாத்திரங்கள் மூலம் திரையில் நன்றாக வேலைபார்த்தார்.
சிவாவின் இந்த 6 வருட வெற்றி பயணத்தை சமூக வலைதள வாசிகள் #6YrsOfPrinceSKism என்ற ஹஷ்டேக்கில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.