[X] Close

மோடி அரசின் பொருளாதார ஆய்வறிக்கையும்: கசப்பான உண்மையும்!

Central-Government-Budget--2018--Economic-Survey-Released

பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், 2018ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. வழக்கமான ஒன்றுதான் என்றாலும், பொருளாதார ஆய்வறிக்கை சார்ந்தே பட்ஜெட் அமையும் என்பது உண்மை.


Advertisement

பொருளாதாரம் வளர்கிறது, கிராமங்கள் முன்னேறுகிறது, முதலீடுகள் குவிகிறது, 2018-ம் ஆண்டு இந்தியாவின் ஆண்டு என்றெல்லாம் பொருளாதார அறிக்கையை புகழ்பாடும் நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கை சார்ந்து, இது போன்ற ஆய்வறிக்கைகள் சமர்பிக்கப்படுவது சாதாரணமே. மேம்போக்காக இந்த அறிக்கையை பார்க்கும் போது, எண் கணக்குகள் அடிப்படையில் இந்தியா பாலாறும், தேனாறும் ஓடும் நாடாகத்தான் தெரியும்.


Advertisement

மத்திய அரசில் பாஜக பதவியேற்ற போது வளர்ச்சி என்ற சொல் பிரதமர் மோதியின் வாயில் இருந்து உச்சரிக்கப்படாத நாளே இல்லை என்று சொல்லலாம். “சப் கே சாத், சப் கோ விகாஸ்” என்ற இந்தி மொழி கோஷம் இப்போது வரை பரவிக் கிடக்கிறது. ஆனால் “விகாஸ்” அது யாரிடம் இருக்கிறது என்பது எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்வியாக இருக்கிறது.

இன்றைக்கு வெளியான பொருளாதார ஆய்வறிக்கையில் முதல் கசப்பான, ஏற்றுக்கொண்டே ஆக வேண்டிய விஷயம், மத்திய அரசின் எந்த நடவடிக்கையும் விவசாயிகளை நேரடியாக சென்றடையவில்லை, அவை எந்த பலனையும் விவசாயிகளுக்கு கொடுக்கவில்லை. ஏனெனில் மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கைப்படி “ விவசாயிகளின் வருமானம் சிறிய அளவு கூட உயரவில்லை” அதாவது கடந்த 2014-ல் விவசாயிகளின் வருமானம் எவ்வளவு இருந்ததோ, அதை விட 1% மட்டுமே விவசாயிகளின் வருமானம் உயர்ந்துள்ளது. வருமானத்தில் 1% வளர்ச்சி பெற, விவசாயிகள் 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.


Advertisement

வேளாண் துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு, கவனம் கொடுக்கப்பட்டு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. பொருளாதார ஆய்வறிக்கையை பார்க்கும் போது, ஆண்டுக்கு 12% வளர்ச்சி இருந்தால் மட்டுமே 2024-ம் ஆண்டுக்குள் மத்திய அரசு கூறுவது போல விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க முடியும்.

ஏன் விவசாயிகளின் வருமானம் உயரவில்லை எனக் கேட்டால் அதிகரித்த வெப்பம், வறட்சி, பாசன வசதியின்மை போன்றவற்றை காரணம் காட்டுகிறது மத்திய அரசு. ஆனால் உண்மையில், விவசாயத்துக்கான நேரடி ஒதுக்கீடுகள் நடைபெறவில்லை, விவசாயம் சார்ந்த தொழில்களுக்கான ஒதுக்கீடுகளே நடைபெற்றன. அதாவது, இவைதான் காரணமென்றால், வருடா வருடம் இதே போன்று இயற்கையின் மாற்றங்கள் நிகழத்தான் செய்யும், அதையே குறை கூறிக் கொண்டு இருக்க முடியுமா? பருவ நிலை மாறுபாட்டின் முதல் பலி விவசாயிகள்தான் என்பதை காட்டுகிறது பொருளாதார ஆய்வறிக்கை.

இதற்கு இடையில் விளைபொருட்களின் ஆதார விலையும் பெரிய அளவில் மத்திய அரசால் உயர்த்தப்படவில்லை. குறிப்பாக பருப்பு, கோதுமையை தாண்டி வேறு எந்த பயிர்களுக்கும் உரிய ஆதார விலை நிர்ணயிக்கப்படவில்லை. அது மட்டுமல்ல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியோடு ஒப்பிடுகையில், பாஜக அரசின் நிர்ணயிக்கும் ஆதார விலை மிகக்குறைவாக உள்ளது. விவசாயிகள் நேரடியாக பயன்பெறும் வகையில் கொள்கைகள் மாற்றப்படாவிட்டால், விவசாயிகள் நிலை பரிதாபமாகும்.

இது ஒருபுறம் இருக்க, தொழில்துறை வளர்ச்சியிலும் தொடர்ந்து வளர்ச்சி இல்லாமலே இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. நாட்டின் தொழில்துறை வளர்ச்சி என்பது 2017-18 ம் ஆண்டுகளில் 3.2% ஆக இருக்கிறது.

ஆனால் 2014-15-ம் ஆண்டுகளின் இந்த வளர்ச்சி 4% ஆக இருந்தது. அடுத்த ஆண்டில் குறைந்து 3.3 % ஆக மாறியது. பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் 4.6% ஆக உயர்ந்தாலும், தொடர்ந்து குறைய ஆராம்பித்து 3.2% ஆக தற்போது உள்ளது. தொழில்துறை வளர்ச்சி குறையும் போது, வேலையின்மை ஏற்படும். திண்டாட்டம் அதிகரிக்கும்.

அடுத்ததாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்பின், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அதாவது 18 லட்சம் பேர் புதிதாக வருமான வரி செலுத்த தொடங்கியுள்ளனர். இதனை பார்க்கும் போது, அடடா என எண்ணத்தோன்றும். ஆனால், இந்த 18 லட்சம் பேரில், ஏறக்குறைய 3 லட்சம் பேர் வருமான வரி உச்ச வரம்பான ரூ.2.5 லட்சம் என்ற வரம்பை விட சற்றும் அதிகமாக இருப்பவர்கள். மற்றவர்கள் ரூ.5 லட்சம் என்ற எண்ணிக்கைகுள் வந்து விட கூடியவர்கள். அப்படி பார்க்கும் போது, குறைந்த நபர்களே நல்ல வருமானம் ஈட்டக் கூடியவர்களாக இருப்பார்கள். இதோடு சேர்ந்து, புதிதாக வருமான வரி செலுத்தக் கூடிய இவர்கள் சேமிப்பு பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சேமிப்பு என்பது எந்த பொருளாதார வளர்ச்சியையும் தராது, முதலீடுகளே தரும். ஆனால் இவர்களால் எந்த முதலீட்டையும் செய்ய இயலாது என்பதே உண்மை.

நீதித்துறையுடனான மோதல் போக்கு மற்றும் உரிய ஒருங்கிணைப்பு இல்லாததால் வரி தொடர்பான, முதலீடு தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. சில நிறுவனங்கள் வழக்குகளை காரணம் காட்டி உற்பத்தியை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நிறுவனங்கள் தொடர்பான பல்வேறு வழக்குகளை மத்திய, மாநில அரசுகளே நடத்துகின்றன அல்லது தாக்கல் செய்கின்றன. இதனால், புதிய தொழில் ஆரம்பிக்கும் ஆர்வத்தை இந்திய முதலாளிகள் இழக்கும் சூழல் உருவாகிறது.

இவற்றோடு சேர்த்து, நவீன இந்தியா, புதிய இந்தியா என சொல்லிக் கொள்ளும் நாட்டில் பெண் பிள்ளைகள் வேண்டாம் அல்லது பெண் குழந்தை இருந்தாலும் ஆண் குழந்தை பிறக்கும் வரை காத்திருத்தல் என்ற மனநிலை வளர்ந்து இருக்கிறது. குறிப்பாக, முதலில் பெண் குழந்தை பிறந்து விட்டால், அடுத்ததாக ஆண் குழந்தை வேண்டும் என்ற மனப்போக்கு உள்ளது. ஆண் குழந்தை பெற்றுக் கொள்ளும் வரை குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் வழக்கமும் உள்ளது. சற்று பொருளாதார ரீதியில் வளர்ந்தோர், ஆணா, பெண்ணா என கண்டறிந்து கருக்கலைப்பிலும் ஈடுபடுகிறார்கள். இப்படிப்பட்ட மனநிலையால் இந்தியாவில் 6 கோடி பெண்கள் காணாமல் போனதாக அல்லது ஆதரவற்றவர்களாக இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.

இப்படி பொருளாதார ஆய்வறிக்கையின் கசப்பு முகங்களும் இருக்கும் சூழலில், இவற்றையெல்லாம் களைவதற்கான, சரி செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளே அவற்றை தரும்.


Advertisement

Advertisement
[X] Close