[X] Close

பெயருக்கான காரணத்தை விளக்கிய மு.க.ஸ்டாலின்..!

mk-stalin-about-his-name

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பெயருக்கான காரணத்தை விளக்கியுள்ளார்.


Advertisement

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, மணமக்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் பேசிய அவர், “ ஸ்டாலின் என்பது தமிழ்ப் பெயரா என்று உங்களுக்கெல்லாம் சந்தேகம் வரும். ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் அல்ல. அது ஒரு காரணப் பெயர். திமுக தலைவர் கருணாநிதி முதலில் எனக்கு ‘அய்யாதுரை’ என்றுதான் பெயர் சூட்ட வேண்டும் என நினைத்திருந்தார். தந்தை பெரியாரை குறிக்கும் செல்லப்பெயர் ‘அய்யா’. துரை என்பது ‘அண்ணா’விற்கு பின்னால் வரும் துரை. ஆகவே ‘அய்யா’வையும் ‘துரை’யையும் இணைத்து ‘அய்யாதுரை’ என்று பெயர் சூட்டதான் முடிவு செய்திருந்தனர்.


Advertisement

ஆனால் ரஷ்ய அதிபராக விளங்கிய ஸ்டாலினின் மறைவையடுத்து சென்னையில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் என் தந்தை கருணாநிதி பேசினார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே மேடையில் ஒருவர் வந்து ஒரு சீட்டைக் கொடுத்திருக்கிறார். அந்தச் சீட்டில் உங்களுக்கு ஆண் குழந்தைப் பிறந்திருக்கிறது என்று கூறப்பட்டிருந்தது. உடனே, அவர் தனக்கு மகன் பிறந்திருக்கிறான் என்றும் அவனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டுவதாகவும் மேடையிலேயே அறிவித்தார். இது வரலாறு” என மு.க.ஸ்டாலின் தனது பெயருக்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close