Published : 26,Jan 2018 06:17 AM

ஜூனியர் டீமில் ஒரு விராத் கோலி!

Shubman-Gill-does-a-Virat-Kohli-during-ICC-U-19-cricket-World-Cup

இந்திய கிரிக்கெட்டின் ஜூனியர் டீமில் தனது அதிரடி ரன் குவிப்பால், ’யாருப்பா இது?’ என்று கவனிக்க வைத்திருக்கிறார் சுப்மன் கில். நியூசிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், கில்-லின் ரன் தாகம், அதிர்ச்சி அளித்திருக்கிறது மற்ற அணிகளுக்கு. அவரது பேட்டிங் ஸ்டைல் மற்றும் சில ஷாட்களை  கையாளும் விதம் விராத் கோலியை, ஞாபகப்படுத்துவதாகச் சொல்கிறார்கள் சீனியர் வீரர்கள் சிலர்.

ஜூனியர் டீமின் கோச், ராகுல் டிராவிட், ‘இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தொடரில், சுப்மன் கில் அபாரமாக ஆடினார். முதல் இரண்டு போட்டியில் முறையே, 29, 24 ரன்கள் எடுத்தார். அவர் பேட்டிங் ஸ்டைலை கொஞ்சம் மாற்றினேன். அடுத்த இரண்டு போட்டியிலும் செஞ்சுரி அடித்தார். மூன்றாவது போட்டியில் 138 ரன் எடுத்தவர், நான்காவது போட்டியில் 160 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார். மிரட்டலான வீரர்’ என்கிறார்.

பஞ்சாபை சேர்ந்த சுப்மன் கில்-லின் அப்பா, லக்விந்தர் சிங் நிலக்கிழார். விவசாயி. கிரிக்கெட் வீரர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். அது கனவாகி போக, உருவாக்கி விட்டார் மகனை. 

‘எங்கள் கிராமம் மொகாலியில் இருந்து 300 கி.மீ தூரத்தில் இருக்கிறது. அங்கு கிரிக்கெட்டுக்கான வசதிகள் இல்லை. அதனால் கிரிக்கெட்டுக்காகவே மொகாலிக்கு வந்துவிட்டோம். அவனுக்கு சின்ன வயசுலயே கிரிக்கெட் ஆர்வம் வந்துவிட்டது. ஒரு நாள் முழுவதும் கூட அவனுக்கு நான் பந்து வீசியிருக்கிறேன்’ என்கிற லக்விந்தர் சிங்தான் கில்லின் கோச், அப்போதும் இப்போதும்! 

‘கிராமத்தில் பிறந்தேன். சின்ன வயதில் இருந்தே அப்பாதான் கோச். அவர்தான் எனக்கு கிரிக்கெட்டை கற்றுத்தந்தவர். இருந்தாலும் மூன்று பேர் என்னை பாதித்த வீரர்கள். அவர்கள்தான் நான் முழுமையாக கிரிக்கெட்டில் இறங்க காரணம். அந்த மூன்று பேர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லக்‌ஷமண். இவர்கள் எப்படி ஆடுகிறார்களோ, அதைக் காப்பியடித்து ஆடுவேன். அப்படித்தான் பழகினேன். அனைத்து பந்துகளையும் தூக்கி அடிப்பதுதான் என் வழக்கம். ஜூனியர் டீமுக்கு வந்தப் பின், டிராவிட் டெக்னிக்கலான விஷயங்களைக் கற்றுத் தந்தார். அதைப் பயன்படுத்தி ஸ்டைலை மாற்றினேன். அது இப்போது கைகொடுக்கிறது’ என்கிற கில்-லுக்கு கவர் டிரைவ் ஷாட்தான் பேவரைட்!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு இந்திய ’ஏ’ அணியில் ஆட வாய்ப்பு வந்திருக்கிறது கில்லுக்கு. ஆனால், காயம் அதற்கு தடை போட, விரக்தியில் இருந்திருக்கிறார். 

‘பிறகு என்னையே ஊக்கப்படுத்திக் கொண்டேன். என்னை தயார்படுத்திக்கொண்டே இருந்தான். கடின உழைப்பு தேவையாக இருந்தது. பயிற்சியில் ஈடுபட்டேன். ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இடம் கிடைத்தது. என் கேரியரை இப்போதுதான் ஆரம்பிக்கிறேன். ஒரு வேளை, அந்த போட்டிகளில் விளையாடி இருந்தால், உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடி இருப்பேனோ, மாட்டேனோ?’ என்று சுபம் போடும் கில்லுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்கிறார்கள். 

வர்லாம் வா! 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்