[X] Close

அரசியலில் புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன:  ரஜினி, கமலை மறைமுகமாக குறிப்பிட்ட ஸ்டாலின்

DMK-Leader-Stalin--Comments-Actors-Political-Entry

“வெற்றிக்குக் கால்கோள் நிகழ்வாகக் களஆய்வு”என்ற தலைப்பில் கட்சித் தொண்டர்களுக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

பிப்ரவரி 1-ம் தேதி முதல் திமுகவின் பல்வேறு கட்ட நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் “வெற்றிக்குக் கால்கோள் நிகழ்வாகக் களஆய்வு” என்ற தலைப்பில் கட்சித் தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அரசியலில் இறங்கியுள்ள கமல் மற்றும் ரஜினியை மறைமுகமாக குறிப்பிட்டு எழுதியுள்ளார் ஸ்டாலின்.

 “அரசியல் தட்பவெப்பம் அறிந்து, புதிய புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன .ஜனநாயகம் என்பது எல்லாருக்குமான வானம். எந்தப் பறவையின் சிறகுகளுக்கு எவ்வளவு வலு இருக்கிறதோ. அதற்கேற்ப சிறகடித்துப் பறந்து, அதன்பின் பாதை தெரியாமல் பயணம் தடைப்பட்டு ஓய்வெடுப்பதை அரசியல் களம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது”-ஸ்டாலினின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகள் இவை.


Advertisement

அதாவது தற்போதைய அரசியல் சூழலை பயன்படுத்தி , ரஜினியும் கமலும் அரசியலில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர், அரசியலுக்கு வருவது அவர்களது உரிமை, ஜனநாயகம் அதனை அனுமதிக்கிறது. அதே நேரத்தில் இறுதி வரை நிலைக்க முடியுமா, அதற்கான வலு இருவரிடமும் இருக்கிறதா என கேள்வி எழுப்புவது போல் அமைந்திருக்கிறது.

இதனை சமாளிக்க திமுக எப்படி செயல்பட வேண்டும், திமுகவின் வலிமை என்ன என்பதையும் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின்  “சுயமரியாதையையும், சமூகநீதியையும் இரு சிறகுகளாகக் கொண்ட திராவிட இயக்கம் என்பது, நூறாண்டு கடந்தும் ஓய்வின்றிச் சிறகடித்துக் கொண்டே உயரே உயரே பறந்துகொண்டுதான் இருக்கிறது. தாய்ப்பறவை தன் குஞ்சுகளுக்கு இரைதேடி வெகுதூரம் பறந்து சென்று, இரையுடன் திரும்பி வந்து வாஞ்சையுடன் ஊட்டுவது போல, தமிழக மக்களுக்கு உண(ர்)வூட்டும் இயக்கமாக, திராவிட அரசியல் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் சிறகடித்துக் கொண்டே இருக்கிறது ” என தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

பல்வேறு தடைகளை தாண்டி திமுக நிலைத்து வருவதாக குறிப்பிடும் ஸ்டாலின், புதியவர்களை போலல்லாமல் நிலையான ஒரு இயக்கமாக திமுக செயல்படுவதாக கூறி நம்பிக்கையூட்டும் வகையில்,கமல்-ரஜினி போட்டியை சமாளிக்க தங்கள் முன் உள்ள சாதக அம்சங்களையும் பட்டியலிட்டு காண்பித்துள்ளார்.


Advertisement

கமலும்,ரஜினியும் தங்களுக்கு போட்டியில்லை என அதிமுக தொடர்ந்து கூறிவரும் நிலையில், கள எதார்தத்தை பிரதிபலித்து , அதனை சமாளிக்க என்ன செய்ய வேண்டுமென ஸ்டாலின் குறிப்பிட்டு கடிதம் எழுதியிருப்பது,கள மாற்றத்தை உணர்ந்திருப்பதை காட்டுகிறது. 


Advertisement

Advertisement
[X] Close