Published : 16,Jan 2018 04:52 PM
பிப்ரவரியில் கமல் சுற்று பயணம்

நடிகர் கமல்ஹாசன் அரசியல் சுற்று பயணத்தை பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் தொடங்க இருக்கிறார்.
ட்விட்டர் அரசியல் மட்டுமே செய்கிறார் என குற்றச்சாட்டுக்கு உள்ளான கமல்ஹாசன் அடுத்தடுத்து கள அரசியலில் வேகம் காட்டத் தொடங்கியுள்ளார். ரஜினிக்கு முன்பாகவே அவரது அரசியல் பிரவேசம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு நவம்பர் 7ம் தேதி அரசியல் வருகையை உறுதி செய்த கமல்ஹாசன், விஸ்வரூபம்2 பட பணிகளில் ஈடுபட்டார். அவை நிறைவடைந்ததை அடுத்து வரும் 26ம் தேதி முதல் தீவிர அரசியலில் இறங்கப் போவதாகவும், அதனடிப்படையில் தமிழகம் முழுக்க சுற்றுபயணம் செய்ய இருப்பதாகவும் கமல்ஹாசன் கடந்த சனிக்கிழமை அறிவித்தார்.
ஆனால், பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திற்கு சுற்றுபயணத்தை தொடங்கத் திட்டமிட்டிருப்பதாக கமல்ஹாசன் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின் அரசியல் கட்சியின் பெயரை வெளியிடவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கமலின் அரசியல் சுற்றுபயண விவரங்கள் வரும் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.