[X] Close

ஞாநி: இறந்தும் இயங்கும் தனிநபர் இயக்கம்…

Special-article-about-Journalist-Gnani

எண் 39, அழகிரிசாமி சாலை, கே.கே.நகர் – ஞாநியின் வீட்டு முகவரி மட்டுமல்ல இது. பரிக்‌ஷா நாடகக் குழுவிற்கும், கேணி இலக்கிய சந்திப்புக்கும், எண்ணற்ற இளைஞர்களுக்கும், பல பரிசோதனை முயற்சிகளுக்கும் இதுவரை இதுதான் முகவரியாக இருந்தது. இன்று அந்த முகவரி தனது முகவரியை இழந்துள்ளது. எழுத்தாளர், மூத்த பத்திரிகையாளர், பலதுறைகளின் செயற்பாட்டாளர் ஞாநி நம்மைவிட்டு மறைந்திருக்கிறார்.

நூலகத்தை இழந்த புத்தகங்கள் போல அவர் வாழ்ந்த தெருவெங்கும் உள்ள சிதறிக் கிடக்கும் இளைஞர்கள் கூட்டமும், அடுத்தடுத்து மரியாதை செலுத்தவரும் பல துறைப் பிரபலங்களும் ஞாநி என்ற மாமனிதரின் மரணம் எவ்வளவு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஓரளவு கணிக்க உதவுகின்றனர். அளவீடுகளில் அளக்க முடியாத இந்த இழப்பு ஈடுசெய்யவே முடியாதது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.


Advertisement

இடிக்கப்பட்ட கண்ணகி சிலை மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்ட போது, ‘கண்ணகி சிலை என்ன கரடி பொம்மையா?’ – என்று கேட்ட துணிச்சல் பத்திரிகையாளரை தமிழகம் இழந்திருக்கிறது. ’தமிழகத்தில் இந்தித்திணிப்பு கூடாது, தமிழர்கள் மதிக்கப்பட வேண்டும்’ என தமிழுக்காக தமிழர்களுக்காக இந்தியாவெங்கும் ஓங்கி ஒலித்த பெருங்குரலை தேசம் இழந்திருக்கிறது. விவாத மேடைகள் ஒரு நெறி பிறழாத கருத்தாளரையும், எழுத்துலகம் ஒரு கலகக்காரரையும், நாடகமேடைகள் ஒரு பெருங்கலைஞனையும் இழந்துவிட்டன. இளைஞர்கள் ஒரு வழிகாட்டியையும் குழந்தைகள் அவர்களின் உரிமைகளுக்காக ஒரு அரணையும் இழந்துள்ளனர். பரந்த உலகம் ஒரு சுற்றுச்சூழல் போராளியை இழந்துள்ளது. அனைத்தையும் தாண்டி தனிப்பட்ட முறையில் ஞாநியின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஏற்படுத்தியுள்ள இழப்பு மிகப் பெரியது.

மரணத்துக்கு முந்தைய சில மணி நேரங்கள் வரையில் அவர் உழைத்துக் கொண்டுதான் இருந்தார். சில ஆண்டுகள் முன்பாக சிறுநீரகம் செயலிழந்த நிலையில் டயாலிசிஸ் குழாயுடன் போராடியபோதும் அவர் தனது உழைப்பைக் குறைத்துக் கொள்ளவில்லை. வலிகளையும் வெளிக்காட்டியது இல்லை.

இந்த ஜனவரி 1ஆம் தேதி புதிதாக யூ டியூப் சானல் ஒன்றைத் துவங்கிவிட்டு, ஜனவரி 13ஆம் தேதி தனது புத்தகக் கண்காட்சியின் அரங்கு எண் 211ல் வாசகர்களை சந்தித்து அடுத்த சந்திப்புக்கு திட்டம் போட்டுவிட்டு, கிரீன் மேட் தொழில்நுட்பத்தில் தான் எடுத்த குழந்தைகளுக்காக குறும்படத்தின் வெளியீட்டுக்கு நாள் பார்த்துக் கொண்டு, இன்னும் பல எண்ணற்ற செயல்திட்டங்களோடு இயங்கிக் கொண்டிருந்த ஞாநியின் இயக்கத்தை உடல்நலம் நிறுத்தி இருக்கிறது.

புத்தாண்டின் போது ‘2016டன் ஒப்பிடும்போது எனக்கு 2017 மேலான வருடம்.உடல் உபாதைகள் குறைந்திருந்தன. 2018 இன்னும் மேலானதாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.’ – என்று முகநூலில் பதிவிட்டு இருந்தார் ஞாநி, அந்த நியாயமான ஆசை இன்று நித்திரைக்குள் மூழ்கி இருக்கிறது. ஆனாலும் மரணம் அவரிடம் 5 மடங்குக்கு நட்டத்தையே சந்தித்து இருக்கிறது. 5 நபர்களின் வாழ்க்கையை அமைதியாக வாழ்ந்துவிட்டு, நமக்குள்ளும் தன்னைக் கொஞ்சம் விதைத்துவிட்டுப் போயிருக்கிறார் ஞாநி. 

பொதுப்பணியில் கலகக் குரல்களை அடிக்கடி வெளியிட்ட போதும், தனிப்பட்ட வாழ்வில் விதிமீறல்களை வெறுத்த நெறிமிக்கவராகவே ஞாநி இருந்தார். பத்திரிகையாளர் குடியிருப்பில் இருந்த தனது வீட்டை அரசு மதிப்பீட்டில் அவர் விற்க முனைந்தபோது ‘சந்தை மதிப்பு 2 மடங்கு இருக்கும்’ என்று பிறர் சொன்னார்கள். ஆனால் ‘அது விதிமீறல்’ என்று ஞாநி மறுத்தார், உண்மையான தேவையில் உள்ள ஒருவருக்கு அந்த வீட்டை நேர்மையாக விற்றார். ‘எழுத்தாளனின் வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இருக்கக் கூடாது’ – என்று சொன்ன ஞாநி அதைத்தான் வாழ்நாள் முழுதும் பின்பற்றினார்.

இறப்பிற்குப் பின்னும் ஞாநி ஞாநியாகவே இருக்கிறார். அவரது உடல் அவரது ஆசைப்படி மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்படுகிறது. இயங்காத போதும் அவர் ஒரு இயக்கமாக இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார், உடலை மட்டுமல்ல, உயிரையும் கொடுத்தே சென்றிருக்கிறார் ஞாநி. இதோ அவரது உயிர் புத்தகக் கண்காட்சியின் 211ஆவது அரங்கில் நமக்காகக் கிளைபரப்பிக் காத்திருக்கிறது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close