
மதுரவாயல்-துறைமுகம் இடையிலான பறக்கும் சாலை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமி, தமிழக திட்டங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர்களை இன்று சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். அதன்படி மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை முதலில் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பு குறித்து பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இனயம் துறைமுகத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மதுரவாயல் - துறைமுகம் இடையிலான பறக்கும் சாலை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று கூறினார். திட்டத்தை விரைந்து செயல்படுத்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், மத்திய, மாநில அரசுகள் இணைந்து திட்டத்தை செயல்படுத்தும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் 800 கி.மீ. சாலைகளை தேசிய சாலைகளாக தரம் உயர்த்தவும் மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.