
தாய்ப்பால் கொடுப்பதை ஏன் கட்டாயமாக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை மறுக்கப்பட்ட ஐஸ்வர்யா என்ற பெண் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கிருபாகரன் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். ஐஸ்வர்யா வழக்கை முடித்துவைத்த நீதிபதி, பெண்களின் பேறுகால விடுப்பு மற்றும் தாய் பாலின் அவசியம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக மத்திய மாநில அரசுகளை வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டார். வழக்கை முடித்து நீதிபதி கூறுகையில், “தாய்பால் என்பது குழந்தைகளுக்கான முதல் தடுப்பு மருந்து. இந்தியாவில் தாய்பால் கொடுப்பவரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் 99,500 குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு பலியாகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் பேறு காலத்தில் குழந்தைகள் இறப்பது அதிகமாகி உள்ளது” என்றார்.
ஜனவரி 22-ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதி பல்வேறு கேள்விகளை முன் வைத்தார். அவற்றில் சில கேள்விகள் பின்வருமாறு:-
மத்திய அரசு வழங்கும் பேறுகால விடுப்பை தமிழக அரசு போல 6 மாதத்திலிருந்து ஏன் 9 மாதமாக உயர்த்தி வழங்கக்கூடாது?. மத்திய அரசை போல பேறுகால விடுப்பை 6 மாதங்களாக உயர்த்தாத மாநிலங்கள் அடுத்த ஒரு வருடத்திற்குள் உயர்த்த வேண்டுமென மாநில அரசுகளுக்கு ஏன் மத்திய அரசு அறிவுறுத்தக்கூடாது?
தேசிய நலன் கருதி மாநில பட்டியலில் உள்ள பேறுகால விடுப்பையும், குழந்தைகளுக்கான தாய்பாலுக்கான உரிமையையும் மத்திய அரசு ஏன் கையாளக்கூடாது? குறைந்தபட்சம் 6 மாதத்திலிருந்து 2 வருடம் வரையில் தாய்பால் குடிப்பதை பிறந்த குழந்தையின் அடிப்படை உரிமையாக ஏன் நீதிமன்றம் அறிவிக்கக் கூடாது?
மத்திய மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளை கவனிக்கவும், உணவளிக்கவும் கிரீச் வசதி செய்யப்பட்டுள்ளதா? பிரசவகால ஆபத்துகளை கருத்தில்கொண்டு சிறப்பு காப்பீட்டு திட்டங்களை ஏன் மத்திய மாநில அரசுகள் உருவாக்கக்கூடாது?
மக்கள்தொகை உயர்வை கருத்தில்கொண்டு, இரண்டு குழந்தைகளுக்கு பிறகு பேறுகால விடுப்போ, பயன்களோ கிடையாது என பெண் ஊழியர்களிடம் உத்தரவாதம் எழுதி வங்குவதை ஏன் கட்டாயமாக்கக்கூடாது? அரசு ஊழியர்களுக்கான பேறுகால விடுப்பை வழங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஏன் விதிகளை உருவாக்கக்கூடாது?
குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் மார்பக புற்றுநோய் ஒழிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பேறுகால விடுப்பை பயன்படுத்துபவர்கள் ஏன் அந்த விடுப்பு காலத்தில் மட்டுமாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை மத்திய மாநில அரசுகள் ஏன் கட்டாயமாக்கக்கூடாது?
பிரபலமானவர்கள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், மருத்துவ ஆலோகர்களை கொண்டு தாய்ப்பால் ஊட்டுவதின் முக்கியத்துவத்தை பணிக்கு செல்லும் பெண்களுக்கு மத்திய மாநில அரசுகள் ஏன் விளம்பரப்படுத்தக்கூடாது?
ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் உள்ளதுபோல தாய்ப்பால் ஊட்டுவதை கட்டாயமாக்கும் வகையில் மத்திய அரசு ஏன் சட்டமாக்கக் கூடாது? குழந்தைகளுக்கான உணவு பொருட்களை விளம்பரம் படுத்துவதை தடை விதிக்கும் சட்ட பிரிவுகள் முறையாக. அமல்படுத்தப்படுகிறதா.?
பொது இடங்களில் தாய்பால் தருவதற்கு தனி அறை அமைக்க சட்டம் இயற்றப்படுமா.?” என்பன உள்ளிட்ட 15 கேள்விகளை நீதிபதி கிருபாகரன் எழுப்பினார்.