
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச அறிவிப்புதான் இன்றைய பேசு பொருளாக மாறி இருக்கிறது. குறிப்பாக சமூகவலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் ரஜினிகாந்த் தொடர்பான ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.
நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 26-ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்தச் சந்திப்பு இன்றுடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, தான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம் என்றார். சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாகவே ரஜினி அரசியலுக்கு வருவாரா..? மாட்டாரா..? என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அரசியலுக்கு வரஉள்ளதாக ரஜினி அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து உற்சாக மிகுதியில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பிற்கு பல திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு தான் சமூக வலைதளங்களிலும் இன்றைய பேசு பொருளாக மாறி இருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டரை அதிகமாக பயன்படுத்தும் இன்றைய இளைய தலைமுறையினர் கூட, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர். ஏகப்பட்ட ரஜினியின் ரசிகர்கள், தங்களது ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து ட்விட்டரில், #Rajinikanthpoliticalentry, #RajiniForTamilNadu போன்ற ஹேஷ்டேக்குகள் காலை முதலில் இருந்து ட்ரெண்டாகி வருகின்றன.