
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும், ரஜினியின் அரசியல் வருகை உண்மையிலேயே மகிழ்ச்சியளிப்பதாகவும் ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “ ஜனநாயக நாட்டில் யாருக்கும் அரசியலுக்கு வர உரிமை இருக்கிறது. அந்த வகையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார். எங்கள் துறைக்கு சினிமா துறையில் புகழ்பெற்ற ரஜினிகாந்த் வருவது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. அவர் வருவதை நானும் வரவேற்கிறேன். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல கட்சிகள் உருவாகியிருக்கின்றன. மக்கள் ஏற்றுக்கொண்டால்தான் எந்தவொரு இயக்கமும் தொடர்ந்து செயல்பட முடியும். வெற்றி என்பது மக்கள் மனதில்தான் இருக்கிறது. மக்கள் யாருக்கு என்ன பதவியை கொடுக்க வேண்டுமோ அதனை கொடுப்பார்கள்” என தெரிவித்தார்.
முன்னதாக சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் இன்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, தான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம் என்றார். சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.