Published : 30,Dec 2017 04:48 AM

விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரி யார்?: காவல்துறை விசாரணை

Who-is-the-officer-involved-in-lecturer-s-examination----police-investigation

பாலிடெக்னிக்‌ விரிவுரையாளர் தேர்வு மதிப்பெண் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இடைத்தரகர் கணேசன், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக்குகளில் உள்ள 2,058 விரிவுரையாளர் காலி பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு கடந்த நவம்பர் மாதம் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்ததையடுத்து தேர்வு முடிவு திரும்பப் பெறப்பட்டு சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முறைகேடாக மதிப்பெண்களை பெற்றதாக கூறப்படும் 156 பேரின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தபோது அவர்கள் கணேசன் என்ற கார் ஓட்டுநருடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டது தெரியவந்தது.

இவருடைய வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது 15 லட்சம் ரூபாய் இருப்பு இருந்தது. அவரை கைது செய்து  விசாரித்ததில் முறைகேட்டில் உறுதுணையாக இருந்ததை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

முறைகேடு செய்த கும்பல், கணேசனுக்கு ஆறு லட்சம் ரூபாய் அளித்ததும் தெரியவந்துள்ளது. மேலும் மணியன் என்பவர்தான் முக்கிய தரகராக செயல்பட்டதாக கணேசன் தெரிவித்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

தலைமறைவாக உள்ள மணியனை தேடும் காவல்துறையினர், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஒரு அதிகாரிக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதும் தெரியவந்திருப்பதாகவும், அந்த அதிகாரியை கண்டுபிடிக்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும்,இந்த முறைகேடு நொய்டாவில் உள்ளா டேட்டா எண்ட்ரி மையத்தில் பணிபுரிந்த ஒரு நபரால் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. அதுகுறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்