Published : 29,Dec 2017 04:25 AM
ஆஷஸ் டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில்
நடந்து வருகிறது. ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 327 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் வார்னர் மட்டும் சதம் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை அந்த அணி பறிகொடுத்தது. இங்கிலாந்து தரப்பில் பிராட் 4 விக்கெட்டுகளும், ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும்
கைப்பற்றினர்.
அடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அலஸ்டைர் குக் அபாரமாக ஆடி, இரட்டை சதம் அடித்தார். இது
அவருக்கு ஐந்தாவது இரட்டை சதம். அவர் நிலைத்து நின்று ஆடினாலும் மற்றவர்கள் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்த வண்ணம்
இருந்தனர். அவர் 244 ரன் எடுத்தார். நேற்று அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 491 ரன்கள் எடுத்திருந்தது.
நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் போட்டி தொடங்கிய வேகத்திலேயே ஆண்டர்சன் விக்கெட்டை வீழ்த்தினார். இதையடுத்து இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். ஹசல்வுட், லியான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது. பேன்கிராப்ட் 27 ரன்களும் கவாஜா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்நிலையில் மழைக் குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. வார்னர் 40 ரன்களுடன் கேப்டன் ஸ்மித் 25 ரன்களுடன் களத்தில் உள்ளனர். அந்த அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.