Published : 28,Dec 2017 05:07 PM
145 இந்திய மீனவர்களை விடுதலை செய்தது பாகிஸ்தான்

குல்பூஷண் ஜாதவ் பிரச்னைக்கு இடையே பாகிஸ்தான் சிறையில் இருந்து 145 இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்லாமாபாத் சிறைச்சாலையில் உள்ள குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி சேத்தன்குல் மற்றும் தாயார் அவந்தி ஆகியோர் டிசம்பர் 25-ம் தேதி சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போது குல்பூஷன் மனைவி நடத்தப்பட்டது தொடர்பாக இந்தியா பாகிஸ்தான் இடையே கருத்து மோதல்கள் ஒரு வாரமாக நீடித்து வருகிறது. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்து வருகிறது.
இந்த அரசியல் பிரச்சனைகளுக்கு நடுவே, பாகிஸ்தான் சிறையில் இருந்து 145 மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி 8-ம் தேதிக்குள் இரண்டு பகுதியாக 291 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பாய்சல் கூறியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். மீதமுள்ள 146 மீனவர்கள் ஜனவரி 8-ம் தேதிக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.