Published : 27,Dec 2017 04:58 PM
தமிழகத்திற்கு ஒகி புயல் நிவாரணம் ரூ.133 கோடி விடுவிப்பு

தமிழகத்தில் ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பதற்கான முதல்கட்டமாக ரூ.133 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
ஒகி புயலால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. குறிப்பாக கன்னியாகுமரி முழுமையான சேதத்தை அடைந்தது. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வாழை மற்றும் ரப்பர் தோட்டங்கள் பாதிப்படைந்தன. நூற்றக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பவில்லை. இதனால் ஒகி புயல் பாதிப்புகளை பேரிடராக அறிவித்து மத்திய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே ஒகி புயல் பாதிப்பு குறித்து தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி, புயல் நிவாரணமாக 325 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். இதிலிருந்து இடைக்கால நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.133 கோடி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. இதைப் போலவே கேரளாவுக்கும் ரூ.133 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.