Published : 26,Feb 2017 07:02 AM
ட்விட்டரில் கோரிக்கை விடுத்த பெண்ணுக்கு பிரதமர் மோடி கொடுத்த சர்ப்ரைஸ்

ஜக்கி வாசுதேவ் அளித்த ஷால்வையை டெல்லியை சேர்ந்த ஷில்பி திவாரி என்பவருக்கு பிரதமர் மோடி பரிசளித்தார்.
கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் மோடி நரேந்திர மோடி கடந்த 24ம் தேதி திறந்து வைத்தார். அதன் பின்னர் ஈஷா யோகா மையத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு அவர் பேசினார். விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடிக்கு ஆதியோகி படம் இடம்பெற்ற ஷால்வை ஒன்றினை ஜக்கி வாசுதேவ் அளித்திருந்தார். விழா முழுவதும் பிரதமர் மோடி அந்த ஷால்வையை அணிந்திருந்தார். அந்த ஷால்வையை தனக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம், ட்விட்டர் மூலம் டெல்லியைச் சேர்ந்த ஷில்பி திவாரி என்ற பெண் கேட்டிருந்தார். இதையறிந்த பிரதமர் மோடி, ஷால்வையுடன், தனது கையெழுத்திட்ட கடிதத்தினையும் ஷில்பி திவாரி அனுப்பியுள்ளார். பிரதமர் அனுப்பிய ஷால்வை மற்றும் கடிதத்தின் புகைப்படங்களை ஷில்பி திவாரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமது கோரிக்கைக்கு செவிசாய்த்து பிரதமர் மோடி, ஷால்வையை பரிசாக வழங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஷில்பி திவாரி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.