
ஆர்.கே நகர் தேர்தல் முடிவு திமுகவின் தோல்வி அல்ல, தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய தோல்வி என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே நகரில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றுள்ளது. மூன்றாம் இடத்தில் திமுக வேட்பாளர் 24,055 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்துள்ளார். நாம் தமிழர் கட்சி 3,860 வாக்குகளும், பாஜக 1,471 வாக்குகளும் பெற்றுள்ளன. நோட்டாவிற்கு 2,373 வாக்குகள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களிடன் பேசிய மு.க.ஸ்டாலின், ’அதிமுக ஒவ்வொரு வாக்களர்களுக்கும் ரூ.6000 பணம் வழங்கி இருப்பதை தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம். தினகரன் அணியினர், ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட தேர்தலின் போது ரூ.4000 வழங்கியுள்ளனர். அத்துடன் தற்போது வாக்களர்களுக்கு இருபது ரூபாய் நோட்டு வழங்கி, தேர்தலில் வெற்றி பெற்றால் ரூ.10000 தருவதாக கூறி ஹவாலா முறையில் வாக்குகளை விலை பேசியுள்ளனர். அதனையும் ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளோம். பணப்பட்டுவாடாவிற்கு தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை துணை நிற்பதுடன், தேர்தலுக்கு முந்தைய நாள் தினகரன் ஹவாலா முறையில் பணப்பட்டுவாடா செய்ய ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியும், அமைச்சர்களும் துணை நின்றுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியும், தினகரன் அணியும் கூட்டு சதி செய்துள்ளனர். திமுகவை பொறுத்தவரையில் ஜனநாயக முறைப்படி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தோம். இந்த தோல்வி என்பது திமுகவின் தோல்வி அல்ல, தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய தோல்வி என்பதை வெக்கத்துடன் சொல்லிக்கொள்கிறேன்’ என்று கூறினார்.