தேர்தல் ஆணையம் இமாலய தோல்வி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் இமாலய தோல்வி: ஸ்டாலின் குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையம் இமாலய தோல்வி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் இமாலய தோல்வி அடைந்துள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்துள்ளார். காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில் திமுக தோல்வி அடைந்துள்ளது. 

தேர்தல் முடிவுகள் குறித்து, “ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தோல்வி – தி.மு.க-வுக்கானது அல்ல, இந்திய தேர்தல் ஆணையத்தின் இமாலயத் தோல்வி” என்ற தலைப்பில் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஸ்டாலின் அறிக்கையில், “

ஆர்.கே.நகர் தொகுதியிலும் வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்ட "தாராளமானதும் ஏராளமானதுமான தர்மம்" வென்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

பாதாளம் வரை பாய்ந்த பணத்தையும் தாண்டி, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் மருதுகணேஷ்க்கு 24651 வாக்காளர்கள், தங்களின் விலை மதிக்க முடியாத வாக்குகளை அளித்திருப்பது நேர்மையான, உயிரோட்டமுள்ள தேர்தல் ஜனநாயகத்தின் மீது, இன்றைய சூழலிலும் அவர்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலுக்குத் துணை நின்று, "6000, 10000" போன்ற பண மழையிலிருந்து ஜனநாயகத்தை, எப்படிப்பட்ட சவாலாக இருந்தாலும் அதனைச் சந்தித்துப் போராடிப் பாதுகாத்திட வேண்டும் என்ற சீரிய நோக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலைச் சந்தித்தது. 

"வாக்காளர் பட்டியல்" சரிபார்ப்பில் தொடங்கி "வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம்" விநியோகிக்கப்படுவது வரை பலமுனைகளிலும் தேர்தல் ஆணையத்தின் சட்டப்படியான உதவியையும், முறையான கண்காணிப்பையும் நாடினோம். தேர்தல் ஆணையம் அலட்சியம் காட்டி, ஏனோதானோ என்றிருந்த நேரத்தில், உயர்நீதிமன்றத்திலும் அயராது போராடினோம். 

"ரூபாய் நோட்டுக்கள்" குத்தீட்டி போல் தேர்தல் ஜனநாயகத்தின் மார்பில் ஊடுருவி உயிருக்கே உலை வைத்துக் கொண்டிருந்த நேரத்தில், தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம், "நடப்பது நடக்கட்டும் நமக்கென்ன" என்று பாராமுகமாக இருந்ததே தவிர, பண விநியோகத்தைத் தடுக்கவில்லை. சுதந்திரமான தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையம், காவல்துறை மற்றும் அதிகார இயந்திரமும் துரும்பைக் கூட எடுத்துப் போட முயற்சிக்கவில்லை.

உயர்நீதிமன்றமே கண்டிப்பான உத்தரவிட்டும் கூட, "ஹவாலா பாணியில்" வாக்குப் பதிவு தினத்தன்றே வாக்காளர்களுக்குப் பணம் வாரி வாரி இறைக்கப்பட்டதை கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்தது, ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையினரும் மட்டுமல்ல- வானளாவிய அதிகாரங்கள் கொண்ட தேர்தல் ஆணையமும் தான்!” என்று குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com