
ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள் பல கேள்விகளை எழுப்புகின்றன என காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே நகரில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகளும், மூன்றாம் இடத்தில் திமுக வேட்பாளர் 24,055 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சி 3,860 வாக்குகளும், பாஜக 1,471 வாக்குகளும் பெற்றுள்ளன. நோட்டாவிற்கு 2,373 வாக்குகள் கிடைத்துள்ளன.
இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய பீட்டர் அல்போன்ஸ், “ஒரு வகையில் பார்த்தால் பல அதிர்ச்சிகளை தரக்கூடிய முடிவாகவே ஆர்.கே இடைத்தேர்தல் உள்ளது. நான் கேள்விப்பட்டவரையில் ஆர்.கே நகர் மக்களுக்கு பணம் தரக்கூடாது என்ற உறுதியுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இருந்தார். அதேபோன்று யாரேனும் இதுதொடர்பாக பேசினாலும், வாக்குக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை இதோடு முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், அதனால் எந்த விளைவு வந்தாலும் பார்ப்போம் என்ற முடிவுடனும் ஸ்டாலின் இருந்தார்.
அந்த நிலைப்பாட்டுக்கு கொடுத்த விலையாக தேர்தல் முடிவுகள் இருக்கலாம். அதிமுக இரு அணிகளும் பணம் கொடுத்துள்ள நிலையில், தினகரனுக்கு மட்டும் ஏன் வாக்குகள் விழுந்தது? என்ற கேள்வி எழுகிறது. எனவே இதனை பாஜகவிற்கு எதிராக மக்கள் அளித்த வாக்குகளாக நான் நினைக்கிறேன். அத்துடன் மோடி அரசு, எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவாக இருந்து, தினகரன் அணிக்கு சோதனைகளை கொடுத்ததாக மக்கள் நினைத்துள்ளனர். அதனால் தான் இந்த முடிவு வந்துள்ளது” என்று கூறினார்.