Published : 24,Dec 2017 12:08 PM
ஆர்.நகரில் பணமழை பெய்துள்ளது: ஜி.ராமகிருஷ்ணன்

ஆர்.கேநகரில் திமுக வெற்றி பெறாதது வருத்தம் அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ளார். இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், “ஆர்.கே நகர் தேர்தலை பொறுத்தவரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கு என்பது அதிமுக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று நினைத்த பாஜவிற்கும், மாநில ஆட்சியை பாஜகவிற்கு தாரைவார்த்த அதிமுகவிற்கும் பாடம் புகட்ட வேண்டும் என்பது தான். எனவே தான் இந்த இரண்டு கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக திமுகவிற்கு ஆதரவளித்தோம். அதேபோல் அதிமுகவும், பாஜகவும் தோல்வியடைந்துள்ளது. அத்துடன் இத்தனை கட்சிகள் ஆதரவளித்தும் திமுக தோல்வியடைந்துள்ளது என்பது வருத்தம் அளிக்கிறது.
ஆர்.கே நகரை பொறுத்தவரை ஏற்கனவே பணப்பட்டுவாடா காரணமாக இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. அப்போது பணப்பட்டுவாடா செய்த தினகரன், தற்போதும் பணப்பட்டுவாடா செய்துள்ளார். இதனால் ஆர்.கே நகரில் பணமழை பெய்துள்ளது. எனவே ஆர்.கே நகர் தேர்தல் முடிவில் பணத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. மேலும் தினகரனும், மதுசூதனும் ஆர்.கே நகர் மக்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை, பணத்தின் மீது நம்பிக்கை வைத்துதான் வாக்குகளை பெற்றுள்ளனர். பணப்பட்டுவாடாவை எதிர்க்கட்சிகள் தடுக்க முடியவில்லை என்பதுடன், அதனை தேர்தல் ஆணையமும் வேடிக்கை பார்த்தது ஜனநாயக கேலிக்கூத்தாகும்” என்று கூறினார்.