Published : 25,Feb 2017 03:03 PM
மேகதாது அணை விவகாரம்: பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

மேகதாது அணை உள்ளிட்ட, தமிழகத்தைப் பாதிக்கும் கர்நாடகாவின் எந்தஒரு திட்டத்திற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி முதலமைச்சர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், மேகதாது அணை கட்டுவதற்காக மத்திய நீர்வள ஆணையம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகிய அமைப்புகளிடம் கர்நாடக அரசு அனுமதி கோரி இருப்பதாக கூறியுள்ளார். காவேரி நீர் தீர்ப்பாயம் கடந்த 2007ஆம் ஆண்டு அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக, கேரளா இருமாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில், மறு ஆய்வு மனுவும், இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, மேகதாது அணைத்திட்டம் குறித்த முழுமையான அறிக்கையை, வடிகால் மாநிலங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கர்நாடக அரசிடம் வலியுறுத்தி இருப்பதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி தமிழக முதலமைச்சரிடம், மத்திய நீர்வள அமைச்சர் கூறியதாகவும் பழனிசாமி அந்தக் கடித்ததில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மேகதாது அணையைக் கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடகா அரசு தொடர்ந்து மேற்கொள்வது, காவிரி நீர் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவை மீறுவதுடன், தமிழக மக்களின் விருப்பத்திற்கு எதிரானதுமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்படும் வரை, மேகதாது உட்பட தமிழகத்தை பாதிக்கும் கர்நாடகாவின் எந்த ஒரு திட்டத்திற்கும் அனுமதி வழங்கக் கூடாது என தமிழக முதலமைச்சர் பழனிசாமி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.