குஜராத் முதல்வர் போட்டியில் நான் இல்லை: ஸ்மிர்தி இரானி

குஜராத் முதல்வர் போட்டியில் நான் இல்லை: ஸ்மிர்தி இரானி
குஜராத் முதல்வர் போட்டியில் நான் இல்லை: ஸ்மிர்தி இரானி

குஜராத் முதலமைச்சர் யார் என்பதற்கான போட்டியில் தாம் இல்லை என்று மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி கூறியுள்ளார்.

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 99 தொகுதிகளை கைப்பற்றி பாஜக 6-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 68 தொகுதிகளில் பாஜக 44 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இரு மாநிலங்களிலும், முதல்வரை தேர்வு செய்யும் பணிக்கு தேர்வுக்குழு பாஜக தலைமை அமைத்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சரோஜ் பாண்டே ஆகியோர் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சரை, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் நரேந்திரசிங் தோமர் ஆகியோர் தேர்வு செய்கின்றனர்.

குஜராத் மாநிலத்தில் பாஜக 100 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என்று அக்கட்சி தரப்பில் நம்பப்பட்டு வந்தது. ஆனால் 100 தொகுதிகளை கூட பிடிக்க முடியாமல் 99 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதனால், முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானியை மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே இரு மாநிலங்களிலும், முதலமைச்சர் பதவிக்காக கட்சியின் முன்னணியினர் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. குஜராத் முதல்வராக விஜய் ரூபானி விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானியும் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளதாக கூறப்பட்டது. 

இந்நிலையில், குஜராத்தில் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் தாம் இல்லை என்று ஸ்மிர்தி இரானி கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மிர்தி இரானி, “எல்லோரும் என் மீது சவாரி செய்ய விரும்புகிறார்கள். அதனால் தான் இதுபோன்ற வதந்திகளை பரப்புகிறார்கள்” என்று கூறினார். வதந்திகளுக்கு ஸ்மிர்தி இரானி முற்றுப்புள்ளி வைத்துள்ளதால், விஜய் ரூபானி முதலமைச்சராகவும், நிதின் படேல் துணை முதல்வராகவும் 2019 பொதுத்தேர்தல் வரை தொடர்வார்கள் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com