
தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு டன் கணக்கில் ரேஷன் அரிசி நாள்தோறும் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ஆந்திராவை ஒட்டியிருக்கும் திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் ரேஷன் அரிசியை பயன்படுத்தாத அட்டைதாரர்களிடம் இருந்து ஒரு கிலோ 5 ரூபாய்க்கு வாங்கப்படுவதாக கூறப்படுகிறது. அவை 25 கிலோ மூட்டைகளாக தயார் செய்யப்பட்டு அரக்கோணம் மற்றும் திருத்தணியில் இருந்து ரயில்கள் மூலம் இரவு நேரங்களில் கடத்தப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. 200 ரூபாய்க்கு பெண்களை கூலிக்கு அமர்த்தி, அந்த அரிசியை திருப்பதி, சித்தூர் பகுதிகளுக்கு இடைத்தரகர்கள் கொண்டு சேர்ப்பதாக கூறப்படுகிறது.
இரவில் சோதனை குறைவாக இருக்கும் என்று கூறி ரயில்களில் இருக்கைகளுக்கு அடியில் வைத்து அரிசி கடத்தப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இப்படி நாள்தோறும் 10 டன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாகவும், அவை கிலோ ஒன்றிற்கு 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. ஆந்திராவில் அந்த அரிசி பாளீஷ் செய்யப்பட்டு 25 ரூபாய்க்கும் கூட விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.