
பத்திரப்பதிவு துறையில் நடக்கும் ஊழல்கள் குறித்து தாக்கல் செய்த பதில்மனுவில் திருப்தியில்லை என்றும், பத்திர பதிவுத்துறைத் தலைவர் விரிவான விளக்கங்களுடன் நாளை பதில்மனு தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாத்தாவின் சொத்துகளை தனது பெயருக்கு மாற்றித் தர பதிவுத்துறை தாமதிப்பதாக பூபதி என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக, ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்ய பத்திரப்பதிவு துறைக்கு உத்தரவிடப்படிருந்த நிலையில், இன்று பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன், வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை செயலர் சார்பிலும் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், தமிழகத்தில் உள்ள 578 சார் பதிவாளர் அலுவலகங்களில், 155 அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியுள்ளதாகவும், 70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 77 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் இருவர் தண்டிக்கப்பட்டதோடு, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பதிவுத்துறை அலுவலகங்களில் உள்ள கணிப்பொறி அறை, ஆவண அறை உள்ளிட்டவற்றில் மூன்றாம் நபர்கள் நுழையாமல் தடுக்க ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் பொருத்தும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், இது அமலுக்கு வரும் போது, அதிகாரிகள் மட்டுமே நுழைய முடியும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பதிலை ஏற்க மறுத்த நீதிபதி கிருபாகரன், 10 வருடத்தில் இவ்வளவு குறைவான தொகை மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார். அடுத்த விசாரணையின் போது உரிய பதிலை தாக்கல் செய்யாவிட்டால், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட வேண்டி வரும் என நீதிபதி எச்சரித்து வழக்கின் விசாரணையை நாளை ஒத்திவைத்தார்.